நமீபியா ஆட்டத்தால் அரண்டு போன தென் ஆப்பிரிக்கா.. காயத்தால் தோல்வியில் இருந்து தப்பியது!
நமீபியா ஆட்டத்தால் அரண்டு போன தென் ஆப்பிரிக்கா.. காயத்தால் தோல்வியில் இருந்து தப்பியது!
வின்ட்ஹோக்: நமீபியாவுக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்கா, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பைனலில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. நமீபியா அணி 217 ரன்கள் குவித்து மிரள வைத்தது. ஒரு கே கட்டத்தில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. நமீபியா அணியின் பேட்ஸ்மேன் அடைந்த காயம் தான் தென் ஆப்ரிக்க அணியை காப்பாற்றியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு தொடக்க வீரர்கள் அதிரடி அடித்தளம் அமைத்தனர். லுவான்-டிரே பிரிட்டோரியஸ், கானர் எஸ்டர்ஹூய்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 பந்துகளில் 156 ரன்கள் சேர்த்தது. மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்ட 20 வயது பிரிட்டோரியஸ், 53 பந்துகளில் 101 ரன்கள் குவித்து தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
மறுபுறம் அதிரடி காட்டிய எஸ்டர்ஹூய்சன் 40 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். இருவருமே தலா 8 சிக்சர்களை பறக்கவிட்டனர். முடிவில் தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. கடின இலக்கை துரத்திய நமீபியா அணியும் தென் ஆப்ரிக்காவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. தொடக்க வீரர்கள் ஜான் பிரைலிங்க், லாரன் ஸ்டீன்காம்ப் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 பந்துகளில் 119 ரன்கள் குவித்தது. பிரைலிங்க் 36 பந்துகளில் 72 ரன்களும், ஸ்டீன்காம்ப் 44 பந்துகளில் 61 ரன்களும் விளாசினர்.
ஆட்டம் நமீபியா பக்கம் சென்ற நிலையில், 16வது ஓவரில் பந்து தாக்கியதால் ஸ்டீன்காம்ப் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடைசி ஓவர்களில் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ரன் வேகத்தை துல்லியமாக கட்டுப்படுத்தினர். இதனால் நமீபியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.