📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 03:31 AM

நீட் தேர்வு விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்திய மாணவர்கள் சங்கத்தினர்

நீட் தேர்வு விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்திய மாணவர்கள் சங்கத்தினர்

நீட் தேர்வு விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்திய மாணவர்கள் சங்கத்தினர்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த விடாமல் போலீசார் தடுப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

Published : June 20, 2026 at 3:28 PM IST

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 3ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகாரை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, நாளை நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையே, நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் கோவை, சேலம் மாவட்டத்தில் இரண்டு மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், நீட் தேர்வை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் இன்று ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மத்திய அரசு மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்றனர். ஆனால் மாணவர்களின் போராட்டத்திற்கு முழுமையாக அனுமதி வழங்கப்படாத நிலையில், அவர்களை போலீசார் கலைந்து போக வலியுறுத்தினர். இருப்பினும், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை கைது செய்து பேருந்துகளில் ஏற்ற போலீசார் முயற்சித்தனர்.

அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த விடாமல் போலீசார் தடுப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும், மாணவர்கள் போராடுவதற்கு மாநில அரசு ஒரு முறையான இடத்தை கூட ஒதுக்காமல் அடுக்குமுறையில் ஈடுபடுவது ஏன்? என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து, மாணவர்களை போலீசார் கைது செய்ய முயற்சிக்கும்போது, மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்து பேருந்துகளில் ஏற்றி சமுதாய நலக்கூடங்களுக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். இந்த சம்பவத்தால் ஆளுநர் மாளிகை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.