முதலமைச்சர் விஜய் நாளை லண்டன் பயணம்: முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை
முதலமைச்சர் விஜய் நாளை லண்டன் பயணம்: முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை
முதலமைச்சரின் இந்த லண்டன் பயணத்தின் மூலமாக தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
Published : September 9, 2026 at 3:51 PM IST
சென்னை: தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் நாளை (செப்.10) லண்டன் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சரான பின்னர், விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக, நாளை இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புறப்படும் எமிரேட்ஸ் விமானத்தில் அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து மற்றொரு விமானத்தில் லண்டன் செல்கிறார்.
இதனிடையே, முதலீட்டாளர்களுடன் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்களை இறுதி செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசின் உயரதிகாரிகள் ஏற்கனவே லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து, லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு எத்தகைய உகந்த சூழல் நிலவுகிறது என்பது பற்றி அவர்களிடம் முதலமைச்சர் விரிவாக எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது. பின்னர், அவர்களை தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறும், அதிக அளவில் முதலீடு செய்யுமாறும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுப்பார்.
தொடர்ந்து, லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்ளும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு புறப்பட்டு, துபாய் வழியாக சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலீடுகளை ஈர்க்க கடும் போட்டி
வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டுக்கும், பிற மாநிலங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இதனால் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக, தமிழகத்தை 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே அரசின் இலக்கு என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த இலக்கை அடையும் நோக்கில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில், 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.