முனைவர் பட்ட மாணவர் கல்வி உதவித்தொகை விவகாரம்
முனைவர் பட்ட மாணவர் கல்வி உதவித்தொகை விவகாரம்- சமூக நீதித்துறை விளக்கம்
மாணவர் பாரதிதாசனுக்கு முதலாம் ஆண்டுக்கு ரூ.36 லட்சம், இரண்டாமாண்டிற்கு ரூ.12.00 லட்சம் என மொத்தம் ரூ.48.00 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று சமூகநீதித் துறை தெரிவித்துள்ளது.
Published : September 17, 2026 at 11:03 PM IST
சென்னை: மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவரும் மாணவர் பாரதிதாசன், தனக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு தமிழக அரசு சமூக நீதி துறையால் அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் ஒரு மாணவருக்கு, கல்வி நிறுவனத்திற்கு செலுத்தும் கட்டணம், அவர் வெளிநாட்டில் வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவை சேர்த்து அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.36.00 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
மாணவர் பாரதிதாசன், மலேசியாவில் உள்ள மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் Ph.D (Tissue Engineering and Regenerative Medicine) படிப்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2025-2026 ஆம் ஆண்டு முதல் மொத்தம் மூன்றாண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டிற்கு ரூ. 36.00 இலட்சம் வரை வழங்கிட ஒப்புதல் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரால் பரிந்துரை கடிதம் 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
அதன்படி, முதலாம் கல்வி ஆண்டான 2025-2026-இல் மாணவரின் Ph.D படிப்புக்கு மொத்தம் ரூ.36.00 லட்சம் கல்வி உதவித்தொகையாக கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.
கல்விக்கட்டணம் ரூ.5,01,638/- பல்கலைக்கழகத்தின் வங்கிக்கணக்கிற்கும், மீதமுள்ள தொகை ரூ.30,98,362/- மாணவரது வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அத்தொகையில் விசா, விமானக் கட்டணம் தவிர மாணவரது ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக பெற்ற தொகை ரூ.27,40,140/-க்கான செலவுப்பட்டியல் (Voucher) சமர்ப்பிக்குமாறு மாணவரிடம் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாணவர் உரிய ஆவணங்களை சரிவர சமர்ப்பிக்காமல் இரண்டாம் ஆண்டிற்கான (2026-2027) கல்வி உதவித்தொகையினை முழுமையாக வழங்கிட கோரி வந்த நிலையில், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவர் பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவேண்டிய முழு கல்விக்கட்டணம் ரூ.5.57 லட்சம் பல்கலைக்கழகத்தின் வங்கிக்கணக்கிற்கும் மற்றும் மாணவருக்கு வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 லட்சம் மாணவரது வங்கிக்கணக்கிற்கும் ஆக மொத்தம் ரூ.12.00 லட்சம் இரண்டாம் ஆண்டுக்காக 2026 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாணவர் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 இலட்சம் விடுவிக்குமாறு கோரியுள்ளார். அதில் மாணவர் சமர்ப்பித்துள்ள உத்தேச செலவின பட்டியல்கள் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை.
இந்நிலையில் மாணவர் முதலாமாண்டு படிப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக சமர்பித்த ஆவணங்களில், ரூ.8,17,962/-க்கான பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை என்பது குறித்தும், மாணவரால் ஆராய்ச்சி செலவினங்களுக்காக வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஆகியவை தொடர்பாக 20.08.2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சரியான விளக்கம் மாணவரால் அளிக்கபடவில்லை.
மேலும் மாணவர் பயிலும் பல்கலைக்கழக பதிவாளருக்கு அவருடைய இரண்டாம் ஆண்டு கல்விக்கான ஆராய்ச்சி செலவின கோரிக்கை ரூ.19.50 இலட்சம் தொடர்பாக, மாணவர் தெரிவித்துள்ள ஆராய்ச்சி பொருட்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் அம்மாணவரின் ஆராய்ச்சிக்குத்தான் தேவைப்படுகிறது என்பதை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு தெரிவித்து இன்று செப்.17 ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டது. பல்கலைக்கழகத்தில் இருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்விஉதவித்தொகை விடுவிக்கப்படும் என்ற விவரமும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன், மாணவர் எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 இலட்சம் மற்றும் இரண்டாமாண்டிற்கு ரூ.12.00 இலட்சம் ஆக மொத்தம் ரூ.48.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவரது காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது.
2025-26 ஆம் ஆண்டு சமூக நீதி துறையால் கல்வித்உதவித் தொகை பெற்று தற்போது பல்வேறு வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணக்கர்களில் பாரதிதாசன் என்பவரை தவிர வேறு எந்தவொரு மாணவரிடமிருந்தும் கல்விஉதவித்தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவது தொடர்பாக எவ்வித புகார்களும் பெறப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் சரியான நேரத்தில் சமூக நீதி துறையால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை பொறுத்தவரை வெளிநாடு சென்று உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டு முதல் பின்வருமாறு சமூக நீதி துறையால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு 2026-27 ஆம் ஆண்டில் சமூக நீதி துறையால் இதுவரை கல்வி உதவித்தொகை பெற்ற மொத்த மாணவர்களைவிட இருமடங்காக 365 மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான கல்வித் உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு சமூக நீதி துறையால் இதுவரை இல்லாத அளவாக ரூ. 131 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை திட்டங்களை பொறுத்தவரை சமூக நீதி துறை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவரது காணொளியானது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்களுடன் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இத்திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.