மனைவியை கொலை செய்து குவாரியில் வீசிய கணவன்; விசாரணையில் தெரிய வந்த 'திடுக்கிடும்' தகவல்
மனைவியை கொலை செய்து குவாரியில் வீசிய கணவன்; விசாரணையில் தெரிய வந்த 'திடுக்கிடும்' தகவல்
கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகளைக் கொண்டு தடய அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
Published : September 26, 2026 at 10:28 AM IST
திருநெல்வேலி: இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பியதால் மனைவியை கொலை செய்து குவாரியில் கணவன் வீசி விட்டு சென்ற கொடூர சம்பவம் திருநெல்வேலியில் அரங்கேறியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கொண்டாநகரை சேர்ந்தவர் மகாராஜா. இவரும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி (34) என்பவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் காதல் திருமணம். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், அமராவதி காணாமல் போனதாக அவரது தாயார் சமீபத்தில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அமராவதி குறித்த தீவிர விசாரணையில் களமிறங்கினர்.
குறிப்பாக, அமராவதியின் கணவர் மகாராஜாவிடம் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே அமராவதியுடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மகாராஜா கடந்த 2024 ஆம் ஆண்டு அகிலா (23) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இது தெரிய வரவே அமராவதிக்கும், மகாராஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
அந்த வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் இடையே மிகப் பெரிய தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த தகராறு முற்றிய நிலையில், அமராவதியை சமாதானம் பேசி இரு சக்கர வாகனத்தில் பாப்பான்குளம் நவாஸ் குவாரிக்கு அழைத்துச் சென்ற மகாராஜா அங்கு வைத்து அவரை கடுமையாக தாக்கி, பின்னர் குவாரியில் தள்ளி விட்டு கொலை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த தகவலின் அடிப்படையில், கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பான்குளம் பகுதியில் உள்ள நவாஸ் குவாரியில் போலீசார் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு உள்ளிட்ட எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தடய அறிவியல் துறை அலுவலர் ஆனந்தி நேரில் வந்து பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருநெல்வேலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடு மற்றும் எலும்புத் துண்டுகள் அமராவதியுடையது தானா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.