மம்தாவுடன் நட்பு பாராட்டும் ராகுல்
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. காங்கிரசும் தனித்தே, 293 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை கடுமையாக எதிர்த்து வந்தார் மம்தா பானர்ஜி. 'இண்டி' கூட்டணியில் இருந்தாலும், ராகுல் மீதான வெறுப்பால், காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனால், சோனியாவுடன் நட்பில் இருந்தார்.
சமீபத்தில், டில்லியில் நடந்த இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார் மம்தா. சோனியாவிற்கு அருகிலேயே அமர்ந்தபடி, நீண்ட நேரம் அவருடன் பேசினார்; பரிசும் அளித்தார். கூட்டத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை, 'வேனிஷ் குமார்' அதாவது, 'காணாமல் போன குமார்' என, கிண்டலாக பேசினார். இது, கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கும், சோனியாவிற்கும் மகிழ்ச்சியை தர, அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு பின், சோனியா, ராகுல், மம்தா ஆகியோர் ஒன்றாக சந்தித்தனர். மம்தாவை, 'ஆன்டி' என பாசமாக அழைத்ததோடு மட்டுமல்லாமல், 'நீங்கள் மிகவும் எடை குறைந்து விட்டீர்கள்' என, ராகுல் கூற, 'ஆமாம்... தேர்தல் பிரசாரத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, எடை குறைந்து விட்டது' என கூறினாராம் மம்தா. மோடியை எதிர்க்க, இத்தனை நாள் ராகுலை வெறுத்து வந்த மம்தா, இப்போது நட்புடன் உள்ளார்.