📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 11, 2026 12:31 AM

Mandaadi Review

Mandaadi Review

Star Cast - சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார்

Director - மதிமாறன் புகழேந்தி

சென்னை: சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் திரைப்படம் மண்டாடி. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இதில் சூரியுடன் சுஹாஸ், சத்யராஜ் மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படமானது இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

காமெடியனாக இருந்த சூரி இப்போது தமிழின் பிஸி ஹீரோக்களில் ஒருவர். அவர் கதையின் நாயகனாக தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு ஜானர்களில் இருக்கின்றன. அப்படி இந்த முறை அவர் தொட்டிருப்பது கடல். பாய்மர படகுகள் குறித்து புகைப்படங்களிலும், கதைகளிலும் மட்டுமே பெரிதாக கேட்டவர்களுக்கு மண்டாடி மூலம் பெரிய விருந்தையே கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் மதிமாறனும், ஹீரோ சூரியும்.

மண்டாடி கதை என்ன?: பாய்மர படகு போட்டியை தங்களது அடையாளமாகவே பார்க்கும் மீனவ கிராம மக்கள். அந்த அடையாளத்தின் வெளிச்சமாக இருக்கும் சூரி; தான் உயிராக நினைத்த பாய்மர படகு போட்டி, காதலி என அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு சம்பவத்தால் ஊரை விட்டே சென்று சென்னையில் அடைக்கலமாக; மீண்டும் ஊருக்கு வரும் அவர்; இழந்த பெருமையை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

எப்படி இருக்கு படம்?: இதுவரை தமிழ் சினிமா பெரிதாக பேசாத பாய்மர படகு விஷயத்தை படத்தின் மெயின் தீமாக வைத்திருக்கும் மதிமாறனுக்கு முதலில் கை குலுக்கல்களும், கை தட்டல்களும். மீனவ கிராம மக்களின் வாழ்வியலை இந்த கோணத்திலிருந்து இதுவரையில் யாரும் அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொட்டது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு புரியும்படியும், பரபரப்பாகவும் திரைக்கதையை கொண்டு சென்றும் மிரட்டிவிட்டார் இயக்குநர். வெற்றிமாறனின் பட்டறையிலிருந்து பட்டை தீட்டப்பட்டு வந்த வைரமாக ஜொலிக்கிரார்.

படத்தின் ப்ளஸ்: படத்தின் பலங்களில் முதன்மையானது சந்தேகமே இல்லாமல் சூரிதான். அவர் தோன்றும் முதல் ஃப்ரேமிலிருந்து படத்தின் இறுதி ஃப்ரேம் வரை அனைவரையும் தன் நடிப்பு, உடல்மொழி என அத்தனையிலும் துள்ளி குதிக்க வைக்கிறார். அவர் ஸ்க்ரீனில் தோன்றும் போதெல்லாம் ரசிகர்களின் கரகோஷங்களும், உற்சாக குரல்களும் தியேட்டரை அதிர வைக்கிறது.

யப்பா மாஸ் ஹீரோக்களே உங்கள் பின்னால் முழு பலத்தோடு ஒரு முழுமையான நாயகன் வந்துகொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்க. ஆச்சரியம் தரும் விதமாக தியேட்டர்களில் இளம்பெண்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடிந்தது. சூரிக்கு பெண் ரசிகைகளும் உயர்ந்துகொண்டு செல்கிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. படம் முழுவதுமே ஒரு வித இறுக்கத்தோடு உலா வரும் சூரியை பார்க்கையில்; இந்தப் புலி எப்போது பாயப்போகிறதோ என்ற உணர்வை ரசிகனுக்குள் கடத்துகிறார். அதுவே அவருக்கு பெரிய வெற்றிதான்.

முக்கியமாக, சூரிக்கு தொடர்ந்து பில்ட் அப்புகள் ஏற்றப்படுகின்றன. அந்த பில்ட் அப்புகளை அடுத்தடுத்து இயக்குநர் ப்ரெசண்ட் செய்த விதம் உண்மையில் புருவத்தை உயர்த்த செய்தது. பஞ்சாயத்து சீன், பயிற்சி போட்டி என பல இடங்களில் இயக்குநர் நம்மை கண் கொட்டாமல் பார்க்க வைத்துவிட்டார். சூரியும் அதற்கேற்றபடி மாஸ் காண்பித்திருக்கிறார். இயக்குநருக்கு நிச்சயம் வளமான எதிர்காலம் உண்டு. வாழ்த்துகள் மதி.. படத்தின் இரண்டாவது பாதிவரை சூரி இறுக்கமாக இருப்பது நமக்கும் ஒருவித இறுக்கத்தை நேரம் செல்ல செல்ல கொடுக்கிறதுதான். ஆனால் ஒரு இடத்தில் உடைந்து அழும்போது நாமும் சேர்ந்தே அழுதுவிடுகிறோம். சூரி உண்மையில் மகா நடிகன்.

ஜிவி பிரகாஷின் இசை: படத்தில் வரும் மற்ற கேரக்டர்கள் அனைவருமே தங்களது பங்களிப்பை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். முனியாக வரும் சத்யராஜ், மாரியாக வரும் மிதுன் என அத்தனை பேருக்கும் மாஸ் மொமன்ட்ஸ் இருக்கின்றன. அவை சூப்பராக ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கின்றன. அதிலும் படத்தின் ஆரம்பத்திலேயே மிதுனுக்கு வைத்த அந்த ஷாட் எல்லாம் தரமான ரகம். மஹிமா நம்பியாருக்கு பெரிய வேலை இல்லையோ என்று நினைத்தபோது; படத்தின் இரண்டே சீன்களில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டு தன்னையும் நிரூபித்திருக்கிறார். மஹிமாவுக்கு உண்மையில் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடிய காட்சிகள் அவை.

வில்லனாக வரும் சுஹாஸும் முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை மெர்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவை அனைத்துக்கும் பெரும் துணையாக இருந்தது ஜிவி பிரகாஷின் இசை. மனிதர் ரீ ரெக்கார்டிங்கில் பின்னி பெடலெடுத்துவிட்டார். சூரி, சத்யராஜ், மிதுன் ஆகியோருக்கு மாஸ் இசையை கொடுத்த அவர்; பாய்மர படகு போட்டி நடக்கும்போது அவர் இசையால் நம்மை பரபரக்க வைக்கிறார். ஜிவி பிரகாஷை தயவு செய்து இன்னும் நிறைய பயன்படுத்துங்கள் இயக்குநர்களே..

வசனம் சூப்பர்: பிரதீப் ராகவ் எடிட்டில் அட்டகாசம் செய்திருக்கிறார். ஒரு இடத்தில்கூட சுணக்கமே ஏற்படவில்லை. அதேபோல் எஸ்.ஆர்.கதிரின் கேமராவும் நம்மை அந்த கிராமத்திலேயே வாழ வைக்கிறது, கடலிலேயே நீந்த வைக்கிறது. 'பந்தயம் என்றால் போட்டி இல்லை அறிவு', 'வெள்ளைக்காரன் எதையாவது இனாமா கொடுக்கிறான்னா அது சந்தையில் வியாபாரத்துக்கு வரப்போகுதுனு அர்த்தம்,' உள்ளிட்ட வசனங்கள் மூலமும் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர்.

படத்தில் மைனஸே இல்லையா?: படத்தில் மைனஸே இல்லையா என்று இருக்கின்றனதான். மீனவ கிராமங்களின் பாய்மர படகு போட்டியை இவ்வளவு ஆழமாக பேசிய இயக்குநர்; அவர்கள் வாழ்வியலையும், வலியையும் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். இரண்டு பரம்பரைகளுக்கு இடையேயான பகையையும் இன்னும் கொஞ்சம் வெயிட்டேற்றி சொல்லியிருக்கலாம். மேலும் இறுதி பாய்மர படகு போட்டியில் ஆனை சுழியை கடந்து வருவதுதான்; கதையில் ஹீரோவை வெல்ல வைப்பதற்கான ஒரே ஆப்ஷன். அதைத்தான் இயக்குநர் செய்திருக்கிறார். ஆனால் அந்த இடம் மட்டும் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை.

அது சரி முழு திருப்தி தரக்கூடிய படைப்பை கொடுக்க கடவுளாலேயே, இயற்கையாலயே முடியாத போது மதியால் முடிந்துவிடுமா என்ன?.. ஆனால் இந்த சுழி சீனுக்கு முன்னதாகவே பல இடங்களில் ரசிகர்களை திருப்திப்படுத்திவிட்டார் இயக்குநர். அதன் காரணமாக இந்த ஓவர் ஹீரோயிச சீனை மன்னிக்கவே தோன்றுகிறது. ஆகமொத்தம், சூரிக்கு இந்தப் படம் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. கோலிவுட் கடலில் யாராலும் வீழ்த்த முடியாத மண்டாடியாக வரும் காலங்களில் அவர் செல்வார்.

'மண்ணுக்குள் தலை போகும்வரை மண்டாடிக்கு எதுவும் மறக்காது', என்ற வசனம் படத்தில் வரும். அதுமாதிரி சூரியின் தலை மண்ணில் விழும் வரை இந்த மண்டாடி அவருக்கு மறக்க முடியாத படமாகவும், வெற்றியாகவும் அமைந்திருக்கிறது. வாழ்த்துகள் சூரி..