📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 18, 2026 04:34 PM

லஞ்சம் மறுத்த அதிகாரிகளுக்கு சிபிஐபி விருது

லஞ்சம் மறுத்த அதிகாரிகளுக்கு சிபிஐபி விருது

லிட்டில் இந்தியாவில் குப்பை வீசியதற்காக $300 அபராதம் விதிக்கப்பட்ட ஒருவர், அதனை $100 லஞ்சமாக மாற்ற முயன்றபோது, செர்டிசைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் இருவர் அதனை நேர்மையின் பாடமாக மாற்றினர்.

லஞ்சத்தைத் துணிச்சலுடன் நிராகரித்து நேர்மையை நிலைநாட்டியதற்காக, செர்டிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த அதிகாரிகள் இருவருக்கு லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) பாராட்டு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) நடைபெற்ற லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் ஊழல் எதிர்ப்புப் பங்காளித்துவக் கட்டமைப்பு நிகழ்ச்சியில், இந்த ஆண்டு 21 பேர் கெளரவிக்கப்பட்டனர். அதில் செர்டிஸ் துணைக் காவல் அதிகாரி (அமலாக்கம்) சுகீர்த்தா கலைவாணன், அமலாக்க அதிகாரி ஸ்ரீ சுதன் செல்லா ஆகியோரும் அடங்குவர்.

நடந்தது என்ன?

கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், தேக்கா பகுதியில் சுற்றுக்காவல் பணியில் இருந்த அந்த அதிகாரிகள் இருவரும், பொது இடத்தில் குப்பை வீசிய 30 வயது ஆடவர் ஒருவருக்கு $300 அபராதச் சீட்டை வழங்கியிருந்தனர்.

ஆனால், அபராதத்தைத் தவிர்க்க எண்ணிய அந்த நபர், $100 ரொக்கத்தை லஞ்சமாகக் கொடுத்து தப்பிக்க முயன்றார்.

சற்றும் தயங்காமல் அந்தக் கையூட்டை நிராகரித்த அந்த அதிகாரிகள், லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சிங்கப்பூர் சட்டப்படி கடும் குற்றம் என எச்சரித்ததோடு, உடனடியாகக் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.

“வழக்கமான சுற்றுக்காவல் பணியில் இருந்தபோதுதான் அந்த நபர் குப்பை வீசியதைப் பார்த்தோம். ‘இதை வைத்துக்கொண்டு என்னை விட்டுவிடுங்கள்’ என அவர் $100ஐ நீட்டினார்.

‘‘ஆனால், பயிற்சியில் கற்றுக்கொண்ட நேர்மையும் கடமையும்தான் நினைவுக்கு வந்தது. ஒரு நொடிகூட யோசிக்காமல் மறுத்துவிட்டோம்,” என்று அதிகாரி சுகீர்த்தா, 29, தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதனைத் தொடர்ந்து, அந்த ஆடவர்மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 6(பி)-இன் கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருது குறித்து அதிகாரிகள் பெருமிதம்

“விருதை எதிர்பார்த்து நாங்கள் செயல்படவில்லை; எங்கள் கடமையைச் செய்தோம். விருது கிடைத்ததை அறிந்த குடும்பத்தினர் மிகவும் பெருமைப்பட்டனர். 10 ஆண்டு சேவையில், சக அதிகாரிகளுக்கும் இளையர்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சி,” என்று அதிகாரி ஸ்ரீ சுதன், 31, கூறினார்.

“தவறு செய்துவிட்டு லஞ்சம் கொடுத்துத் தப்பித்துவிடலாம் என்று நினைப்பதே தவறு. இருப்பினும், தவறே செய்யாமல் இருப்பது அதனினும் சிறப்பு,” என்பதே இவர்கள் சமூகத்திற்கு விடுக்கும் செய்தி.