குவாரியை நிரந்தரமாக மூட கிராம மக்கள் போராட்டம்
கொட்டாம்பட்டி: ‘சொக்கம்பட்டி பகுதியில் செயல்படும் கல்குவாரியினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அதனை நிரந்தரமாக மூட வேண்டும்’ என, ஐந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சொக்கம்பட்டி அகிலா குட்டு பகுதியில் கல்குவாரி செயல்படுகிறது. குவாரி உரிமையாளர் மக்கள் பயன்படுத்தும் பாதையை அடைத்துள்ளதால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயமும் செய்ய முடியவில்லை.
அருகே உள்ள அய்யனார் கோயிலில் கற்கள் விழுந்து சிலைகள் சிதிலமடைந்துள்ளன. தினமும் மாலை நேரத்தில் சொக்கம்பட்டி - கொட்டாம்பட்டி ரோட்டில் போக்குவரத்தை நிறுத்தி வெடி வைக்கின்றனர். வெடித்து சிதறும் பாறைகள் விவசாய நிலங்கள், வீடுகள் மீது விழுவதால் விரிசல் ஏற்படுகிறது. குவாரி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, காவிரி கூட்டுக் குடிநீர் குழாய், பெட்ரோல் மற்றும் காஸ் குழாய்கள் செல்கிறது. எனவே குவாரியை நிரந்தரமாக மூடும்படி சொக்கம்பட்டி, வலைச்சேரி பட்டி உள்பட 5 கிராமத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., சிவக்குமார், துணைத் தாசில்தார் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.