📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 22, 2026 07:03 PM

கடும் தண்டனைக்கு ஆளான பிள்ளையைப் பாதுகாக்க உதவிய ‘சேஃபர்’ பிரிவு

கடும் தண்டனைக்கு ஆளான பிள்ளையைப் பாதுகாக்க உதவிய ‘சேஃபர்’ பிரிவு

சிங்கப்பூரில் பிள்ளைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் புதிய ‘சேஃபர்’ (SAFER) பிரிவு, கடுமையாகத் தண்டிக்கப்பட்ட ஒரு பிள்ளையைப் பாதுகாக்க கைகொடுத்துள்ளது.

ஆறு வயதுக்குக்கீழ் உள்ள ஒரு பிள்ளை உடல் ரீதியாகக் கடுமையான தண்டனைக்கு ஆளாகியது. அதுகுறித்து செங்காங் புளோக் 223Dல் உள்ள அல்கின் குடும்பச் சேவை நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சமூக அமைப்புகள் இதற்குமுன் அறிந்திருக்கவில்லை என்றார் செங்காங் நிலையத்தின் தலைவர் யாஸ்மின் அப்தும் ரஹிம்.

அதைத் தொடர்ந்து அல்கின் நிலைய ஊழியர்கள், தண்டனைக்கு ஆளான பிள்ளையின் குடும்பம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

குடும்ப வன்முறை, நிதி நெருக்கடி, பிள்ளை வளர்ப்பில் சவால்கள் ஆகியவை அந்தக் குடும்பத்தில் காணப்பட்டன.

பிள்ளையின் பாலினத்தைக் குறிப்பிட மறுத்துவிட்ட யாஸ்மின்,”தொடக்கத்திலிருந்து இந்த விவகாரம் பற்றி அறிந்துகொள்வதற்குப் பதிலாக சேஃபர் பிரிவு வழங்கிய தகவல்கள் மூலம் முக்கிய அபாயங்கள்மீது முன்கூட்டியே கவனம் செலுத்தி நேரத்திற்கு உதவ முடிந்தது,” என்றார்.

பிள்ளையைப் பிறகு பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழிமுறைகளைக் குடும்பச் சேவை நிலையம் மேற்கொண்டது.

பிள்ளை தற்போது கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வதில்லை என்ற யாஸ்மின், பிள்ளையின் குடும்பமும் நிலையத்திடமிருந்து ஆதரவைப் பெற்றுவருவதாகப் பகிர்ந்துகொண்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2020ஆம் ஆண்டு நான்கு வயது மேகன் என்ற பிள்ளை தாயாலும் அவரது முன்னாள் காதலனாலும் துன்புறுத்தப்பட்டு மாண்டதை அடுத்து புதிய சேஃபர் பிரிவை அமைச்சு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) அறிமுகம் செய்தது.

வெவ்வேறு அமைப்புகளுக்கு வழங்கப்படும் தகவல்களை ஒன்றிணைத்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சேஃபர் பிரிவு கைகொடுக்கிறது.

தொடக்கக் கட்டமாக, ஏழு வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளுடைய குடும்பங்கள் தொடர்பில் மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, காவல்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அமைப்புகள் வழங்கும் தகவல்களை சேஃபர் பிரிவு ஆய்வு செய்யும்.

பயிற்சிபெற்ற நிபுணர்கள் பிள்ளைப் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுப்பர்.