எல்லாம் சூர்யவன்ஷி மேஜிக்.. சொந்த மண்ணிலேயே அடங்கிய இலங்கை வீரர்கள்.. திருப்பி அடித்த இந்திய அணி!
எல்லாம் சூர்யவன்ஷி மேஜிக்.. சொந்த மண்ணிலேயே அடங்கிய இலங்கை வீரர்கள்.. திருப்பி அடித்த இந்திய அணி!
தம்புலா: இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி நிர்ணயித்த 378 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி, 47.1 ஓவர்களில் 311 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இலங்கையில் 'ஏ' அணிகளுக்குமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ மற்றும் இந்தியா ஏ அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 377 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 8 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 94 ரன்களை விளாசினார்.
இதன்பின் கேப்டன் திலக் வர்மா 67 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களையும் எடுத்தனர். பின்னர் 378 என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இதில் முதல் 10 ஓவர்களிலேயே இலங்கையின் அணியின் டிக்வெல்லா 25 ரன்களிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 3 ரன்களிலும், நுவானிடு ஃபெர்னாண்டோ 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமா - கேப்டன் சஹன் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், சதீரா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
கடைசி நேரத்தில் வனுஜா சஹன் மட்டும் 69 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து போராட, விஜயகாந்த் வியாஸ்காந்த் மட்டும் அவருக்கு உறுதுணையாக நின்றார். அனால் அனுகுல் ராய் பந்தில் விஜயகாந்த் 39 ரன்களிலும், விப்ராஜ் நிகழ் பந்தில் வனுஜா 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 47.1 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்து இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் யாஷ் தாகூர் 3 விக்கெட்டுகளையும், விப்ராஜ் நிகம் 3 விக்கெட்டுகளையும், அனுகுல் ராய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலமாக முத்தரப்பு ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. கேப்டனாக திலக் வர்மாவுக்கு இது முதல் வெற்றியாகும். ஆட்டநாயகனாக வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டார்.