📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 10:33 AM

“கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள் சிம்.எம் சார்?”

“கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள் சிம்.எம் சார்?”

“கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள் சிம்.எம் சார்?”

கடன் தள்ளுபடிக்காக போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

“விவசாயக் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 45-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் திருச்சியில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

“கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது ரூ.75,000 வரையிலான பயிர்க் கடன்கள் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். “தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என்ற கோரிக்கையுடன், செப்டம்பர் 15-ம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சர்வீஸ் ரோடு அருகே 45-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்குப் பந்தல் அமைக்கக் காவல்துறை அனுமதிக்கவில்லை என்றும், மூன்று அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் முடிவின்றி முடிந்ததாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

“காவல்துறை நெருக்கடி கொடுக்கிறது!”

போராட்டக் களத்திலிருந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்ரமணியனிடம் பேசியபோது, “வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி செய்திருக்கின்றனர். அதற்கும் அதிகமாகக் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.3 லட்சம் வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்கெனவே எட்டு அமைச்சர்கள்கொண்ட குழுவினர், மூன்று அமைச்சர்கள்கொண்ட குழுவினர் என்று இரு முறை பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வரைச் சந்திக்கவைத்து கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறினர். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் போராட்டத்தைத் தொடங்கினோம்.

அந்தப் போராட்டத்தை நசுக்கும் வகையில், போராட்டத்துக்கு முதல் நாளே முக்கிய விவசாய சங்க நிர்வாகிகள் வீடுகளுக்குக் காவலர்களை அனுப்பி வீட்டுச் சிறையில் வைத்தார்கள். தனியார் நிலத்தில் பந்தல் அமைக்கவும், தண்ணீர் எடுத்துச் செல்லவும், உணவு சமைக்கவும், மைக்செட் அமைக்கவும் காவல்துறை அனுமதிக்கவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பனை ஓலைகளைத் தலையில் வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அமைச்சர்கள் காந்திராஜ், வினோத், ரமேஷ், கூட்டுறவுத்துறை பதிவாளர் ஆகியோர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘ஒரு குழுவை அமைத்து சென்னைக்கு வாருங்கள்; பேச்சுவார்த்தை நடத்துவோம். போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்றே மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படாததால், கோரிக்கையை நிறைவேற்று வதற்கான அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தோம்” என்றார்.

“வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்”

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமியிடம் பேசியபோது, “நாங்கள் புதிதாக எதையும் கேட்கவில்லை. முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரிவித்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்கிறோம். அரசுக்கு நிதிச்சுமை என்றால், விவசாயிகள் வாங்கிய கடன்களை நீண்டகாலக் கடன்களாக மாற்றலாம். அரசுக்கு நிதி கிடைக்கும்போது அவற்றைத் தள்ளுபடி செய்து, கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கலாம். அதேபோல், குறுவை விவசாயத்துக்கு அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.1 லட்சம் புதிய கடன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம்; எதையும் செய்யவில்லை. ஆனால், தள்ளுபடி செய்யப்படாத கடன்களை வசூலிப்பதற்காக, விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுப்பதுடன், போராட்டத்துக்கும் காவல்துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. முதல்வர் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

த.மா.கா விவசாய அணியின் திருச்சி மண்டலத் துணைத் தலைவர் வயலூர் ராஜேந்திரன், “எங்கள் சார்பில் விவசாயிகள் குழு சென்னைக்கு பேச்சுவார்த்தைக்குச் சென்றாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம். நீண்டகாலக் கடன்கள், நிலுவைக் கடன்கள் உள்ளிட்டவற்றையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைவருக்கும் புதிய கடன் வழங்க வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை” என்றார்.

தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத்திடம் பேசினோம். “கூட்டுறவுத்துறை அமைச்சருடன் இணைந்து முதல்வரிடம் பேசவிருக்கிறோம். அவருடன் ஆலோசித்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயல்வோம்” என்றார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், “விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அவர்கள் ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கு வருவதாகக் கூறியுள்ளனர். அப்போது இந்த விவகாரம் குறித்துப் பேசி முடிவெடுப்போம். காவல்துறை விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை” என்றார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், இன்னும் எத்தனை முறைதான் பேச்சுவார்த்தை நடத்துவது?