கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு: திட்டக்குடி அருகே பரபரப்பு
திட்டக்குடி: திட்டக்குடி அருகே கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி அலுவலகத்திற்கு கிராம மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு நிலவியது.
காந்தி ஜெயந்தியொட்டி, திட்டக்குடி அடுத்த சிறுமுளை ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. மங்களூர் ஒன்றிய பொறியாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் நிலவழகன் முன்னிலை வகித்தார். கிராம மக்கள், ஊராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, சுகாதாரம், வேளாண்மை, கல்வித்துறை உட்பட துறை ரீதியிலான எந்த அதிகாரிகளும் பங்கேற்கவில்லை; ஊராட்சி மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை எனக்கூறி, பகல் 12:00 மணிக்கு கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை பூட்டி, எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களிடம் திட்டக்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார், இனி வரும் காலங்களி்ல முறையாக தகவல் தெரிவித்து கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார். அதையேற்று, பகல் 12:30 மணியளவில் பூட்டை திறந்து விட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது, கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, சுடுகாடு அளவீடு, வடிகால் வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, நேற்று பகல் 12:30 மணியளவில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, பி.டி.ஓ., வரவேண்டும் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நல்லுார் ஒன்றிய பி.டி.ஓ., கொளஞ்சிநாதன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் , கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று பகல் 2:30 மணிக்கு கிராம மக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.