📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 07, 2026 05:02 PM

கே.என். நேரு: ரூ.1020 கோடி ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு

கே.என். நேரு: ரூ.1020 கோடி ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு

சென்னை: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1,020 கோடி ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட 13 பேர்மீது லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலத்தில் அரசு ஒப்பந்தப்புள்ளிகளைக் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாகவும் இதற்காக லஞ்சப் பணம் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அமலாக்கத்துறை அளித்த தகவல்கள், 258 பக்க விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசின் முன் அனுமதியைப் பெற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கே.என். நேரு, அவரது சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், உதவியாளர் கவிபிரசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், ஜே.ஜே.எபினேசர், அரசுப் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில், ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பணிகள் ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், ‘கட்சி நிதி’ என்ற பெயரில் ஒப்பந்தப்புள்ளி மதிப்பில் 7.5 முதல் 10 விழுக்காடு வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.