📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 01:03 PM

இஸ்ரேல் அதிபரை நெகிழ வைத்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சர்

இஸ்ரேல் அதிபரை நெகிழ வைத்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சர்

இஸ்ரேல் அதிபரை நெகிழ வைத்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சர் - உயரிய விருது அறிவிப்பு

ஏற்கனவே இந்த வீர தீர செயலுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கேப்டன் ஸ்மித்தை தொலைபேசியில் அழைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

Published : October 9, 2026 at 11:50 AM IST

ஜெருசலேம்: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயன்ற சக விமானியின் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையிலும், அசாத்திய துணிச்சலுடன் போராடி 174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சருக்கு, இஸ்ரேல் நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு கடந்த வாரம் 174 பயணிகளுடன் ஃப்ளைதுபாய் (Flight FZ1073) விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தின் ஓமன் நாட்டை சேர்ந்த இணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, திடீரென விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி அதனை கீழே விழச் செய்து விபத்துக்குள்ளாக்க முயன்றார்.

இதனை தடுத்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சரை, அவர் காக்பிட் எனப்படும் விமானிகள் அறையிலிருந்த அவசர கால கோடாரியால் தலையிலும் கைகளிலும் கொடூரமாக தாக்கினார். இந்தத் தாக்குதலில் கேப்டன் ஸ்மித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் பீறிட்டது. தாக்குதலின் வீரியத்தால் விமானம் 30 விநாடிகளில் சுமார் 14,000 அடி கீழே செங்குத்தாக இறங்கிச் சரிந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர்.

உயிர் போகும் நிலையிலும், தனது இறுதி ஆற்றலை திரட்டிய கேப்டன் ஸ்மித் மச்சர், காக்பிட் கதவின் லாக்-ஐ உள்ளே இருந்து திறந்து விட்டார். கதவு திறக்கப்பட்டவுடன், உள்ளே பாய்ந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட ஓமன் துணை விமானியை மடக்கிப் பிடித்தனர். அதன் பின், அந்த விமானம் சவூதி அரேபியாவின் தபுக் நகரில் பாதுகாப்பாக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜெருசலேமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், "இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சரின் அசாத்திய தைரியமும், திறமையும் ஒரு மாபெரும் விமானப் பேரிடரை தடுத்துள்ளது. அவர் தற்போது அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி வந்தவுடன், இஸ்ரேல் அரசு சார்பில் அவருக்கு 'வீரச் செயலுக்கான அதிபர் விருது' நேரில் வழங்கி கௌரவிக்கப்படும்" என்று அறிவித்தார்.

ஏற்கனவே இந்த வீர தீரச் செயலுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கேப்டன் ஸ்மித்தை தொலைபேசியில் அழைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.