இந்தோனீசிய எரிமலை வெடிப்பு: பாதுகாப்பாக இருக்க சிங்கப்பூரர்களுக்கு தூதரகம் வலியுறுத்து
எரிமலை வெடிப்பு காரணமாகச் சிரமங்கள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தோனீசியாவில் உள்ள சிங்கப்பூரர்கள் தங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அனாக் கிரக்கத்தாவ் எரிமலை வெடித்ததால் இந்தோனீசியாவின் சில பகுதிகள் சாம்பலால் மூடப்பட்டு, நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஆக அண்மைய நிலவரங்களை அறிய உள்ளூர்ச் செய்திகள் மற்றும் இந்தோனீசிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வத் தகவல்களைக் கவனிக்குமாறும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் சிங்கப்பூரர்களுக்குத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் தென்கிழக்கில் ஏறத்தாழ 850 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அனாக் கிரக்கத்தாவ் எரிமலை செப்டம்பர் 4ஆம் தேதி இரவு வெடிக்கத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, ஜகார்த்தாவின் முக்கிய விமான நிலையமான சோகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிற விமான நிலையங்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் சிங்கப்பூர்த் தூதரகம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
மேலும், சூழ்நிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் விமானச் சேவைகளில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அது தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) அதிகாலையில் ஜகார்த்தாவின் சோகார்னோ-ஹட்டா விமான நிலையத்தில் எரிமலைச் சாம்பல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமான நிலையம் மூடப்பட்டது.
அப்போது முதல் விமானச் சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.