"இந்தியாவுடன் அக்னிப் பரீட்சை.. ஒளிந்துகொள்ள வழியே இல்லை".. ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பேச்சு
"இந்தியாவுடன் அக்னிப் பரீட்சை.. ஒளிந்துகொள்ள வழியே இல்லை".. ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பேச்சு
டெல்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது டி20 டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியிடம் ஆப்கானிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வெறும் 94 ரன்களுக்கு சுருண்ட ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிச்சர்ட் பைபஸ், எவ்வித தயக்கமும் இன்றி தங்கள் அணியின் பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பேசியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிச்சர்ட் பைபஸ், "நாங்கள் இன்னும் நிறைய முன்னேற வேண்டியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் விளையாடும் முதல் டி20 தொடர் இதுவாகும். இது மிகப்பெரிய இடைவெளி. அணியில் உள்ள சில வீரர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் இணைந்துள்ளனர். இந்திய அணி எங்களுக்கு கடுமையான பரீட்சை வைத்து, எங்களது உண்மையான தரம் என்ன என்பதையும், நாங்கள் எங்கே பலவீனமாக இருக்கிறோம் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இனி நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று கூறினார்.
மூன்றாவது போட்டியின் போக்கு குறித்துப் பேசிய அவர், "நாங்கள் படுமோசமாக விளையாடினோம். டாஸ் வென்று சேஸிங் தேர்வு செய்ததில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் பந்துவீச்சில் முதல் 10 ஓவர்களில் எங்கள் கட்டுப்பாடு சுத்தமாக இல்லை. அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சனும் தொடக்கத்திலேயே அற்புதமாக ஆடினர். பவர்பிளேயில் 100 ரன்கள் விட்டுக்கொடுத்த பிறகு, 10 முதல் 20 ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் மீண்டு வந்த விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் தலைமையிலான அந்தப் போராட்டம் அபாரமாக இருந்தது. களத்தில் வீரர்களின் திறமையும் அணுகுமுறையும் மிகச் சிறப்பாக மாறியது" என்றார்.
220 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியது பற்றி குறிப்பிட்ட பைபஸ், "220 ரன்களைத் துரத்தும்போது தொடக்கம் முதலே அடித்து ஆட வேண்டும். ஓவருக்கு 11 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இருந்து தப்பிக்கவோ அல்லது ஒளிந்துகொள்ளவோ வழியே இல்லை. இலக்கை நெருங்காமல் வெறும் 150 ரன்கள் எடுத்து ரன் ரேட்டில் பின்தங்குவதில் எந்தப் பயனும் இல்லை. நாங்கள் வகுத்த திட்டங்களை களத்தில் செயல்படுத்தத் தவறிவிட்டோம். தொடக்கத்தில் இப்ராகிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஜோடி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அந்த வேகத்தைத் தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.
பேட்டிங் சரிவு குறித்து அவர் மேலும் கூறுகையில், "இது பேட்டிங் வரிசை பிரச்சனை அல்ல; அழுத்தமான சூழலில் திட்டங்களைச் செயல்படுத்த முடியாததே காரணம். இப்ராகிம் மற்றும் குர்பாஸ் அனுபவம் வாய்ந்த தொடக்க ஜோடி. கடந்த போட்டியை விட இந்த முறை ஆக்ரோஷமாக ஆடினார்கள். ஆனால் அழுத்தமான சூழலில் விக்கெட்டுகளைக் காக்க தவறிவிட்டோம்.
பும்ரா, அக்சர் படேல் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது எங்களது திட்டங்களில் மிகத் தெளிவான கவனம் இருக்க வேண்டும். இது ஏதோ சாதாரண உள்ளூர் லீக் போட்டியோ அல்லது தரவரிசையில் பின்தங்கிய அணிகளுக்கு எதிரான போட்டியோ கிடையாது. இதுதான் சர்வதேச கிரிக்கெட்டின் உச்சகட்ட அக்னிப் பரீட்சை. இதில் இருந்து நாங்கள் எதைச் சரிசெய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
இந்திய ஆடுகளங்களின் தன்மையை விளக்கிய அவர், "அற்புதமான ஆடுகளங்களில் உலகின் தலைசிறந்த தொடக்க வீரர்களுக்கு பந்துவீசுவது மிகப்பெரிய சவால். இதுபோன்ற பேட்டர்கள் பந்தின் லென்த்தை எளிதாகக் கணித்து நாலாபுறமும் விளாசி விடுகிறார்கள். இதுபோன்ற ஆடுகளங்களில் பந்தின் துல்லியமான லென்த் வெறும் 12 இன்ச் மட்டுமே. அதில் ஒரு பக்கம் தவறினால் புல் ஷாட் அடிக்கிறார்கள்; மறுபக்கம் தவறினால் டிரைவ் செய்கிறார்கள்.
ரஷித் கான், முகமது நபி போன்ற அனுபவ சுழற்பந்து வீச்சாளர்களே பந்தின் லென்த்தை வெறும் 6 இன்ச் தவறவிட்டாலும், இந்திய பேட்டர்கள் பேக்ஃபூட்டில் சென்று தலைக்கு மேலாக சிக்சர் பறக்க விடுகிறார்கள். இது போன்ற அனுபவங்களை நேரடியாகச் சந்தித்தால் மட்டுமே பந்துவீச்சாளர்கள் தங்களது கட்டுப்பாட்டையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள முடியும்" என்றார்.
எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசிய பயிற்சியாளர் பைபஸ், "எங்களை விட பலம் வாய்ந்த அணிகள் ஆதிக்கம் செலுத்தும்போது, அந்த மனத்தடையை நாம் படிப்படியாகத்தான் உடைக்க வேண்டும். திறமைகளை உலகத்தரத்திற்கு உயர்த்திய பிறகே சரியான உத்திகளை உருவாக்க முடியும். அதன் பிறகே அழுத்தமான சூழலில் ஜெயிக்க முடியும். பலவீனமான அணிகளை திறமையால் வென்றுவிடலாம். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்றுள்ள இந்திய வீரர்களை, அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது உலக கிரிக்கெட்டிலேயே மிகப்பெரிய சவால்.
2028 டி20 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றுகளுக்கு முன்னேறி போராட வேண்டும் என்றால், இதுபோன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இந்தத் தோல்வி வீரர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதில் இருந்து தீவிரமாகப் பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவோம்" என்று கூறினார்.