இந்தியாவில் ஸ்டார்லிங்க்… நாட்டின் பாதுகாப்புக்கு சவால்!
புதுடில்லி: ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் இணைய சேவை இந்தியாவில் நுழைவது வெறும் வணிக போட்டி சார்ந்தது மட்டுமல்ல. அது, நாட்டின் இறையாண்மை, தகவல் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த பல ஆழமான சவால்களை உள்ளடக்கியது என, 'தக் ஷஷிலா' கல்வி நிறுவனம் எச்சரித்துள்ளது.இது குறித்து விரிவாக ஆய்வு நடத்திய அந்த கல்வி நிறுவனம், பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளது.* இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், பாதுகாப்பு படையினரால் ஸ்டார்லிங்க் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில், ஸ்டார்லிங்க் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் கூறிய போதும், மியான்மர் எல்லையோரப் பகுதிகளில், 'ஜியோ-பென்சிங்' நுட்பத்தில் உள்ள குறைபாடுகளால் அவை செயல்பட்டிருக்கலாம்.* அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்டார்லிங்க் சாதனங்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்களை பயன்படுத்திய பயனர்கள் குறித்த விபரங்களையும் ஸ்டார்லிங்க் தரவில்லை.* ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது அந்நாட்டு அரசு முழுமையாக இணைய சேவையை முடக்கிய போதும், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட, 50,000 ஸ்டார்லிங்க் டெர்மினல்களை ரேடியோ ஜாமர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.* ரஷ்யா உடனான போரில், உக்ரைன் ராணுவத்தின் தகவல் தொடர்புக்கு ஸ்டார்லிங்க் முதுகெலும்பாக இருந்தது. ஆனால், கிரிமியா மீதான தாக்குதலின் போது எலான் மஸ்க் தன்னிச்சையாக இணைய இணைப்பை துண்டித்து ராணுவ நடவடிக்கையை சீர்குலைத்தார். ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு ஒரு தனியார் நிறுவன தலைவரின் மனநிலையை சார்ந்து இயங்குவது ஆபத்தானது.* அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துடனும், அந்நாட்டின் ராணுவம் மற்றும் 'நாசா'வுடனும், எலான் மஸ்க் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளார். அமெரிக்க தேசிய நலன்களுக்கு முரண்பாடு ஏற்படும் பட்சத்தில், இந்தியாவின் தகவல் தொடர்புகளை முடக்கவோ அல்லது தரவுகளை அமெரிக்காவிடம் பகிரவோ அந்நாட்டு அரசு அவருக்கு அழுத்தம் தர முடியும்* பேரிடர் அல்லது எல்லை போர் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் இந்திய ராணுவமும், நிர்வாகமும் இந்த இணைப்பை நம்பியிருக்கும் போது, சேவை தன்னிச்சையாக நிறுத்தப்படலாம். பயங்கரவாதத் தடுப்பு அல்லது கலவர சூழலில் உள்நாட்டு பாதுகாப்பிற்காக இணையத்தை முடக்க நினைத்தால், அரசுக்கு கட்டுப்படாமல் சிக்னல்கள் தொடர்ந்து இயங்கக்கூடும்.