இந்தியா எங்களை அடித்து நொறுக்கிவிடும் என நினைத்தோம்.. இப்படி ஒரு போட்டியை எதிர்பார்க்கல
இந்தியா எங்களை அடித்து நொறுக்கிவிடும் என நினைத்தோம்.. இப்படி ஒரு போட்டியை எதிர்பார்க்கல
சனோ: இந்தியாவிற்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 போட்டியில், ஜப்பான் கிரிக்கெட் அணி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. இந்த சூழலில் ஜப்பானின் அசாத்திய ஆட்டத்தைக் கண்டு ஜப்பானிய அரசியல்வாதி தாரோ கோனோ ஆச்சரியம் அடைந்துள்ளார்.
பலம் வாய்ந்த இந்திய அணி தங்களை எளிதாக வீழ்த்திவிடும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் ஜப்பான் அணி இறுதிவரை போராடிய விதம் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகத் தரவரிசையில் 41-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் அணி, இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எதிராக ஐந்து ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில கடுமையாகப் போராடியது. சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மந்தமான, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடிய இந்திய அணி, 33 ரன்கள் என்ற இலக்கைப் பாதுகாத்து வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது.
இது குறித்து பேசிய தாரோ கோனோ, "இந்திய அணி எங்களை துவம்சம் செய்துவிடும் என்று நான் நினைத்தேன், ஆனால் ஆட்டம் 'கிட்டத்தட்ட' எங்கள் கைக்கு வந்துவிட்டது. ஜப்பானில் கிரிக்கெட் விளையாடுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளிலும் சேர்க்கப்பட உள்ளதால், எங்கள் அணிக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது" என்றார்.
மழையின் காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அது சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜப்பானிய சுழற்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஜப்பான் சுழற்பந்து வீச்சாளர் சார்லி ஹரா ஹின்ஸ், இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை டக் அவுட் செய்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான இப்ராஹிம் தகாஹாஷி, சஞ்சு சாம்சனை (10 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் பெஞ்சமின் இடோ-டேவிஸ் தன் பங்கிற்கு இஷான் கிஷானை (3 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 16 ரன்கள் எடுத்தார்.
33 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜப்பான் அணி அதிரடியாகத் தொடங்கியது. இந்தியாவின் ரவி பிஷ்னோய் வீசிய மூன்றாவது ஓவரில் 10 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் வீசிய நான்காவது ஓவரில் 7 ரன்களும் எடுக்கப்பட்டன. இதனால் இறுதி ஓவரில் ஜப்பான் வெற்றி பெற 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
கடைசி ஓவரை வீசிய அக்சர் படேல், அலெக்சாண்டர் ஷிராய்-பட்மோர் மற்றும் பெஞ்சமின் இடோ-டேவிஸ் ஆகியோருக்கு அதிரடி ஷாட்கள் ஆட இடம் கொடுக்காமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். இதனால் ஜப்பான் அணியால் 30/3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த ஓவரில் பட்மோர் ரிவர்ஸ் ஸ்லாக் ஆட முயன்றபோது இரண்டு முறை வைடு அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் லெக்-அம்பயர் கிறிஸ் பிரவுனிடம் முறையிட்டதை அடுத்து, இரண்டாவது வைடு முடிவு மாற்றியமைக்கப்பட்டது. இறுதியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.