ஆசிய விளையாட்டு மகளிர் டி20 பைனல்; தங்கத்தை தட்டி தூக்கியது இந்தியா: வெள்ளியோடு இலங்கை அணி ஆறுதல்
ஆசிய விளையாட்டு மகளிர் டி20 பைனல்; தங்கத்தை தட்டி தூக்கியது இந்தியா: வெள்ளியோடு இலங்கை அணி ஆறுதல்
நிஷின்: ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின. நிஷின் கோரகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓபனர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இலங்கை வீராங்கனைகளின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தனர்.
ஷபாலி வர்மா 48 ரன்னில் அவுட்டாக, ஸ்மிரிதி மந்தனாவும் 79 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 19 ரன்னில் அவுட் ஆக, விக்கெட்கீப்பர் ரிச்சா கோஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் குவிக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
அடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஓபனர் சமரி அத்தபட்டு மட்டும் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆக, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். 15.4 ஓவரில் இலங்கை அணி 69 ரன்களில் ஆல்அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் டி20 கிரிக்கெட்டில் முதல் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இலங்கை அணி வெள்ளியோடு ஆறுதல் அடைந்தது.
* இரண்டாவது முறையாக தங்கம்
சீனாவின் ஹாங்க்சோ நகரில் கடந்த 2023ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர்அணி 2வது ஆண்டாக தங்கம் வென்று அசத்தியுள்ளது.