📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 11, 2026 02:34 PM

இந்தியா

இந்தியா

போட்டியாளர்களாக மோதிக்கொள்ளாமல், இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவதே ஆசியாவின் எதிர்காலத்திற்கு நல்லது; மேலும் ஒட்டுமொத்த உலகின் எதிர்காலத்திற்கும் அதுவே நன்மை பயக்கும் என்று கூறியுள்ளார் ‘மைண்ட்வொர்க்ஸ்‘ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு ஆர். கோபாலகிருஷ்ணன்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் புதிதாகத் தொடங்கியுள்ள ‘ஆசியா ரெடி கான்வர்சேஷன்ஸ்’ (ஏஅர்சி) நிகழ்ச்சியின் தொடக்க விழா, பல்கலைக்கழகத்தின் யோங் பங் ஹவ் சட்டப் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) காலை நடைபெற்ற அக்கலந்துரையாடல் அமர்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், ‘‘இந்தியா, சீனா மற்றும் ஆசியாவின் எதிர்காலம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கல்விமான்கள், மாணவர்கள் என ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டோர் மத்தியில் உரையாற்றிய திரு கோபால், ஆசிய வட்டாரத்தின் வளர்ச்சி, வணிகச் சூழல் குறித்துப் பேசினார்.

வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இரு நாடுகளும் பல்லாண்டுகளாக அமைதியான முறையில் வர்த்தகக் கலாசாரத் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய எல்லைப் பூசல்கள், மோதல்களைத் தவிர்த்து வர்த்தக ரீதியில் இரு நாடுகளும் ‘நட்பு ரீதியிலான போட்டியாளர்களாக’ இணைந்துச் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விவரித்தார் .

வர்த்தகம், தலைமைத்துவம் சார்ந்த 21 நூல்களின் ஆசிரியருமான கோபால், இரு நாடுகளும் போர்களைத் தவிர்த்து, பரஸ்பர வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது ஆசிய வட்டாரத்தின் ஒட்டுமொத்தப் பொருளியல் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சி குறித்துக் கருத்துரைத்த பல்கலைக்கழகத்தின் கல்வி உத்தி, புத்தாக்கப் பிரிவின் துணைக் கல்வி அதிகாரி பேராசிரியர் வெங்கி சங்கர்ராமன், “மாணவர்கள் படிக்கும் காலம் முழுவதும் தெளிவான, நோக்கமுள்ள முடிவுகளை எடுக்க உதவுவதே சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இலக்காகும். அவ்வகையில் ‘ஏஅர்சி’ கலந்துரையாடல்கள் இந்த பயணத்தில் முக்கியப் பங்குவகிக்கும்,’’ என்றார்.

மேலும், இதன் மூலம் கற்றல், நேரடி அனுபவம் தொடர்ச்சியான ஈடுபாடு ஆகிய ஒருங்கிணைப்பின் வழியாக ஆசியாவைப் பற்றிய அவர்களின் புரிதல் மேம்படும் என்ற அவர், இது ஆசியா முழுவதிலும் நடக்கும் வளர்ச்சி, அதனைச் சார்ந்த தலைமைத்துவத்தை எவ்வாறு வடிவமைக்கும் என்பதை மாணவர்கள் ஆழமாகச் சிந்திக்கவும் ஊக்குவிக்கிறது,” என்றும் கூறினார்.