இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்துடன் கைக்குலுக்க மறுத்த வங்கதேச கேப்டன்.. வெடித்த சர்ச்சை.. காரணம் என்ன?
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்துடன் கைக்குலுக்க மறுத்த வங்கதேச கேப்டன்.. வெடித்த சர்ச்சை.. காரணம் என்ன?
மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் முடிவில், வங்கதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் கைகுலுக்க மறுத்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவருக்கும் இடையேயான இந்த மோதல் 2023-ஆம் ஆண்டு தாகாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியிலிருந்து தொடங்குகிறது. அப்போது எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட்டுகளை பேட்டால் அடித்து உடைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும் நடுவர்களின் தீர்ப்புகளையும் அவர் கடுமையாக சாடினார்.
அதன்பின்னர் போட்டி டிராவில் முடிந்து, தொடரின் கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டபோது, நடுவர்களையும் மேடைக்கு ஹர்மன்பிரீத் அழைத்தார். நடுவர்கள் வங்கதேச அணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார். இதனால் கோபமடைந்த வங்காளதேச கேப்டன் நிகார் சுல்தானா, தனது அணியினரை உடனடியாக ஆடுகளத்தில் இருந்து டிரெஸ்ஸிங் அறைக்கு அழைத்துச் சென்றார்.
தற்போது எழுந்துள்ள இந்த விவகாரம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய BCB மகளிர் குழுவின் தலைவர் ரபிகுல் இஸ்லாம் பாபு, "ஹர்மன்பிரீத் கவுருடன் கைகுலுக்காமல் இருந்தது நிகார் சுல்தானாவின் சொந்த முடிவு. இதற்கும் வாரியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. விளையாட்டு என்பது உலகை ஒன்றிணைக்கும் ஒன்றாக நாங்கள் பார்க்கிறோம். இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடனும் நட்புரீதியான உறவையே நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆசியக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் 40 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வியடைந்தது. போட்டியில் ஏற்பட்ட இந்த தோல்வி மற்றும் மைதானத்தில் நடத்தப்பட்ட ஒழுங்கீன புகார்கள் ஆகியவற்றின் அடிப்படையில், நிகார் சுல்தானாவின் கேப்டன் பதவி குறித்து பரிசீலிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.