📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 30, 2026 04:02 PM

IND vs WI: ODI என்பதை மறந்து 18 ஓவரில் அடித்து முடித்த கேம்ப்பெல்.. வேடிக்கை பார்த்த இந்திய அணி

IND vs WI: ODI என்பதை மறந்து 18 ஓவரில் அடித்து முடித்த கேம்ப்பெல்.. வேடிக்கை பார்த்த இந்திய அணி

IND vs WI: ODI என்பதை மறந்து 18 ஓவரில் அடித்து முடித்த கேம்ப்பெல்.. வேடிக்கை பார்த்த இந்திய அணி

குவஹாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 'டாஸ்' வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே மரண அடி விழுந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல், ஆடுவது 50 ஓவர் போட்டியா அல்லது 20 ஓவர் போட்டியா என்றே தெரியாத அளவிற்கு ஆடி வெறும் 65 பந்துகளில் சதமடித்து இந்திய பந்துவீச்சை தவிடுபொடியாக்கினார்.

குவஹாட்டியில் உள்ள பார்சபரா மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்திய கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளத்தில் உள்ள புற்கள் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்று கணக்கு போட்ட இந்திய அணிக்கு, கேம்ப்பெல் தொடக்கம் முதலே சுனாமி வேகத்தில் பதிலடி கொடுத்தார்.

அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி 3 ஓவர்களில் 35 ரன்களையும், பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 35 ரன்களையும் வாரி வழங்கினர். குர்னூர் பிரார் 2 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய மோசமான ஷார்ட் பால்களை பவுண்டரிகளாகவும் சிக்சர்களாகவும் பறக்கவிட்ட கேம்ப்பெல் வெறும் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அரைசதம் அடித்த பிறகும் தனது வெறியாட்டத்தை நிறுத்தாத கேம்ப்பெல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவின் சுழலையும் விட்டுவைக்கவில்லை. வெறும் 65 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 வானளாவிய சிக்சர்களுடன் தனது அதிவேக சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற 27 ஆண்டு கால சாதனையை கேம்ப்பெல் முறியடித்துள்ளார். இதற்கு முன் 1999 இல் ரிக்கார்டோ பவல் 72 பந்துகளில் அடித்ததே சாதனையாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட 5வது அதிவேக சதமாகவும் இது பதிவாகியுள்ளது.

இந்திய அணியின் திட்டம், லைன் மற்றும் லென்த் என எதுவுமே எடுபடாமல் ஒட்டுமொத்த பந்துவீச்சு துறையும் திணறியது. ஃபீல்டிங் வியூகங்களை மாற்ற முடியாமல் கேப்டன் சுப்மன் கில் திகைத்து நின்றார். இந்திய வீரர்கள் பந்துகள் பவுண்டரி எல்லைக்கு பறப்பதை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 10 ஓவர்கள் கொண்ட பவர்பிளேயில் மட்டுமே 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களை குவித்து மிரட்டியது. 18 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது. 18.1 ஓவரில் கேம்ப்பெல் 68 பந்துகளில் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.