IND vs WI: சாய் ஹோப் உலக சாதனை படைக்க வாய்ப்பு.. 5வது டி20 போட்டியில் தடுப்பார்களா இந்திய வீரர்கள்?
IND vs WI: சாய் ஹோப் உலக சாதனை படைக்க வாய்ப்பு.. 5வது டி20 போட்டியில் தடுப்பார்களா இந்திய வீரர்கள்?
மும்பை: இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப், பில் சால்ட்டின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த இருதரப்பு தொடரில் ஹோப் இதுவரை 261 ரன்கள் குவித்துள்ளார்.
சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் தொடரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் ஷாய் ஹோப் மேலும் 71 ரன்கள் எடுத்தால், இருதரப்பு டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டின் 331 ரன்கள் என்ற உலக சாதனையை முறியடிப்பார். சால்ட் 2023 டிசம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.
இருதரப்பு டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் பில் சால்ட் 331 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 316 ரன்களுடனும் , எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் 297 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நியூசிலாந்தின் மார்க் சாப்மேன் 290 ரன்களும் , பாகிஸ்தானின் பாபர் அசாம் 285 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது மேற்கிந்தியத் தீவுகளின் ஷாய் ஹோப் 4 போட்டிகளில் 261 ரன்களுடன் உள்ளார்.
மேலும், இந்த இறுதிப் போட்டியில் ஹோப் குறைந்தபட்சம் 25 ரன்கள் எடுத்தால், இருதரப்பு டி20 தொடரில் ஒரு கேப்டனாக அதிக ரன்கள் குவித்த பாபர் அசாமின் சாதனையை முறியடிப்பார். பாபர் அசாம் 2022-ல் இங்கிலாந்துக்கு எதிராக 7 போட்டிகளில் கேப்டனாக விளையாடி 285 ரன்கள் எடுத்திருந்தார்.
ஜெர்மனி கேப்டன் முசாதிக் அகமது 2026-ல் ஆஸ்திரியாவுக்கு எதிராக 5 போட்டிகளில்277 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 4 போட்டிகளில் 261 ரன்கள் எடுத்துள்ள ஷாய் ஹோப் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான 5-வது டி20 போட்டியில் ஹோப் மீண்டும் ஒரு சதமடித்தால், சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக 4 சதங்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார். தற்போது அவர் ரோஹித் சர்மா, பாபர் அசாம் மற்றும் ஈஸ்வதினியின் அடில் பட் ஆகியோருடன் தலா 3 சதங்களுடன் சமநிலையில் உள்ளார்.
நடைபெற்று வரும் தொடரில் ஹோப் இதுவரை 20 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இது ஒரு இருதரப்பு டி20 தொடரில் முழு உறுப்பினர் நாட்டு வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர் சாதனையாகும். கடைசிப் போட்டியில் அவர் மேலும் 7 சிக்ஸர்கள் அடித்தால், ஜெர்மனியின் முசாதிக் அகமதுவின் 26 சிக்ஸர்கள் உலக சாதனையை முறியடிப்பார்.
ஈஸ்வதினியின் அடில் பட் 2025-ல் மொசாம்பிக்கிற்கு எதிராக 5 போட்டிகளில் 22 சிக்ஸர்கள் அடித்துள்ளார் மற்றும் ஆஸ்திரியாவின் கரன்பீர் சிங் 2026-ல் ஹங்கேரிக்கு எதிராக 3 போட்டிகளில் 22 சிக்ஸர்களும் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் ஷாய் ஹோப் இதுவரை 20 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.