📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 17, 2026 05:03 PM

விராட் கோலி கிடையாது.. இந்த இந்திய வீரர் பேட்டிங்கை பார்த்து தான் பயந்திருக்கிறேன்

விராட் கோலி கிடையாது.. இந்த இந்திய வீரர் பேட்டிங்கை பார்த்து தான் பயந்திருக்கிறேன்

விராட் கோலி கிடையாது.. இந்த இந்திய வீரர் பேட்டிங்கை பார்த்து தான் பயந்திருக்கிறேன்- டிவில்லியர்ஸ்

மும்பை: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ், தான் சந்தித்ததிலேயே மிகவும் அச்சுறுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் என தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியில் தனது சக வீரரான விராட் கோலியை அவர் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேவாக்கின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்சிபி அணிக்கு மாறும் முன், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேவாக்குடன் மூன்று சீசன்கள் டி வில்லியர்ஸ் இணைந்து விளையாடினார். சேவாக் களமிறங்கி பேட்டிங் செய்யும் விதம் எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், போட்டியை மிக விரைவாக எதிரணியிடமிருந்து பறித்துவிடும் வல்லமை படைத்தவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய டி வில்லியர்ஸ், "சேவாக் மிகவும் நல்ல மனிதர், ஆனால் அவரது பேட்டிங் முறை மிகவும் மிரட்டலாக இருக்கும். போட்டி தொடங்கி முதல் ஐந்து ஓவர்களுக்குள் அல்லது 20 நிமிடங்களிலேயே நாம் தோற்றுவிட்டது போன்ற உணர்வு எதிரணிக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு அவரது ஆட்டம் தாக்கத்தை ஏற்படுத்தும். அவரது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்துப்பார்த்திருக்கிறேன். ஐபிஎல் தொடரின் முதல் மூன்று ஆண்டுகள் அவருடன் ஒரே அணியில் விளையாடியது மகிழ்ச்சியான அனுபவம்" என்று கூறினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அனைத்து வகை போட்டிகளிலும் சேர்த்து சேவாக் 36 போட்டிகளில் 1,865 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் 5 அரைசதங்களும் அடங்கும். அவரது சராசரி 40.54 ஆகும். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 374 போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக், 38 சதங்கள் மற்றும் 72 அரைசதங்களுடன் 17,253 ரன்களை விளாசியுள்ளார்.

அதே நிகழ்ச்சியில், ஷோயப் அக்தர், லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவரில் யாரை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது என்ற கேள்விக்கு டி வில்லியர்ஸ் பதிலளித்தார். இவர்கள் மூவரையும் தனது சர்வதேச பயணத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

வேகத்தைப் பொறுத்தவரை ஷோயப் அக்தரை எதிர்கொள்வதே மிகவும் கடினம் என்று கூறிய அவர், பும்ரா மிகவும் துல்லியமாகவும் சீராகவும் பந்துவீசக்கூடியவர் என்று பாராட்டியுள்ளார்."எனது தொழில்வாழ்க்கையின் தொடக்க காலத்தில் அக்தர் பந்துவீசினார். பும்ராவை விட மிக அதிக வேகத்தில் அவர் பந்துவீசினார். எனவே வெறும் வேகத்தை மட்டும் கணக்கில் கொண்டால் சந்தேகத்திற்கு இடமின்றி அக்தர்தான் கடினமானவர்.

மலிங்கா வேறு விதமான திறமை கொண்டவர், ஆனால் அந்த சமயத்தில் நான் எனது பேட்டிங் நுட்பத்தை நன்றாகப் புரிந்து வைத்திருந்ததால் அவர் எனக்கு பெரிய அச்சுறுத்தலாக இல்லை," என்று டி வில்லியர்ஸ் விளக்கினார்.

தொடர்ந்து பும்ரா குறித்துப் பேசிய அவர், "எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் பும்ராவை எதிர்கொண்டேன். அப்போது எனக்கு உடல் ரீதியான சுறுசுறுப்பு சற்று குறைந்திருந்தது. இருப்பினும் இருவருக்கும் இடையே சிறந்த போட்டிகள் நடந்துள்ளன. இவர்களில் யார் மிகவும் துல்லியமானவர் என்று கேட்டால் அது பும்ராதான். அவர் அதிக தவறுகளைச் செய்யமாட்டார். அவருக்கு அடுத்தபடியாக மலிங்கா இருப்பார்" என்றார்.

டி20 போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ், 147.05 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 125 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 41.66 ஆகும். அதேவேளையில் பும்ரா, டி வில்லியர்ஸை 3 முறை விக்கெட்டெடுத்துள்ளார்.