📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 26, 2026 12:03 PM

இணையத்தில் ‘செல்வ’ காணொளி; நகை, பணத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்

இணையத்தில் ‘செல்வ’ காணொளி; நகை, பணத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்

நாகர்கோவில்: தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களைச் சமூக ஊடகங்களில் அளவுக்கு அதிகமாகப் பகிர்வது ஆபத்தானது என்பதற்குச் சான்றாக நாகர்கோவில் அருகே பிரபல யூடியூப் இணையரின் வீட்டில் பெருங்கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தங்களிடமுள்ள நகைகளையும் ரொக்கப் பணத்தையும் யூடியூப் ‘ஷாட்ஸ்’ காணொளியில் காட்டிய சில நாள்களிலேயே, அந்த இணையரது வீட்டின் கதவை உடைத்து நுழைந்து, 118 சவரன் தங்க நகைகளையும் பெருந்தொகையையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.

தமிழ்நாட்டின் நாகர்கோவில் அருகிலுள்ள தம்மத்துக்கோணத்தில் உள்ள பாதுகாப்புமிக்க பகுதியான விஐபி கார்டனில் யூடியூப் இணையரான வினோத் குமார் - மதுமிதா வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளை நடப்பதற்குச் சில நாள்களுக்குமுன் மதுமிதா தமது குடும்பச் செல்வங்களை வீட்டின் பூசை அறையில் வைத்துப் படம்பிடித்து, அதனைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் காணொளியாகப் பதிவிட்டிருந்தார்.

கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்ட பாதுகாப்புமிக்க பகுதியில் வீடு அமைந்திருந்தபோதிலும், கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்னதர். பின்னர், வீட்டில் இருந்த 118 சவரன் தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 24) மாலை 5 மணியிலிருந்து இரவு 11.50 மணிவரை வீட்டில் யாரும் இல்லை. அதனை அறிந்து, கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளதாக நம்பப்படுகிறது. மதுமிதா - வினோத்குமார் இணையர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்புதான் அவ்வீட்டை வாங்கிக் குடியேறியதாகச் சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறிய சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகளையும் உள்ளூர்க் கைப்பேசிக் கட்டமைப்பு அழைப்புப் பதிவுகளையும் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வுசெய்து வருகின்றனர்.