இலக்கணம் மாறுதோ… இலக்கியமானது!
டெட்ராய்ட்டில் ஒரு படு நவீன தமிழ்ப்பள்ளி வகுப்பறை… நான்கு வயதுப் பேத்தி, பெற்றோர் கூட்டம், அயர்ச்சி தந்த விளக்கங்கள்… இறுதியில் ஒரு ஆசிரியர் எழுப்பிய கேள்வி என்னைத் தமிழின் தொன்மைக்கே அழைத்துச் சென்றது!
கடந்த வாரம், அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் நகருக்கு அருகிலுள்ள சவுத் லயன் (South Lyon) பகுதியில் அமைந்துள்ள நுண்மாண் தமிழ்ப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். நான்கு வயதான என் பேத்தியை மழலையர் வகுப்பில் அமர்த்திவிட்டு, நான் மட்டும் இன்னொரு குளிரூட்டப்பட்ட அறையில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில் அமர வேண்டிய கட்டாயம்!
பேத்தி தமிழ் கற்க வகுப்பறைக்குள் நுழைந்திருந்தாள். நான், அவளுடைய தமிழ் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்பதற்காகப் பெற்றோர் கூட்டத்திற்குள் நுழைந்திருந்தேன்!
அந்தக் கல்வியாண்டில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவிருக்கும் பாடங்கள், வகுப்புகளின் அட்டவணை, கற்பித்தல் முறைகள் என ஒவ்வொன்றையும் ஆசிரியர்கள் விரிவாகவும் கனிவாகவும் விளக்கிக் கொண்டிருந்தனர். பெற்றோருக்கு அவை அவசியமான தகவல்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எனக்கு மட்டும் நேரம் மெதுவாக நகர்வதுபோல் தோன்றியது.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு அயர்ச்சி தலைதூக்கியது. அதற்குக் காரணம், விளக்கங்கள் அல்ல; ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பள்ளி ஆசிரியர்–பெற்றோர் கூட்டத்தில் மாணவனின் பெற்றோராக அமர்ந்திருந்த அனுபவம்தான்!
பள்ளிக்குச் சென்ற காலத்தில் ஆசிரியர் முன்னால் அமர்ந்திருந்தோம். பின்னர் நம் பிள்ளைகளுக்காகப் பெற்றோர் கூட்டங்களில் அமர்ந்தோம். இப்போது பேத்திக்காக!
அக்கறை மட்டும் மாறுவதில்லை:
தலைமுறைகள் மாறுகின்றன. பள்ளிகள் மாறுகின்றன. ஆனால், குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறை மட்டும் மாறுவதில்லை என்பதை அந்த அறையில் அமர்ந்திருந்தபோது உணர முடிந்தது.
அயல்நாட்டில் தமிழ் கற்பிப்பது ஓர் எளிய பணியல்ல!
தமிழ் அறியாதவர்களுக்குத் தமிழ் கற்பிப்பதற்கும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
அமெரிக்காவில் பிறந்து வளரும் குழந்தைகளின் உலகம் ஆங்கிலத்தால் சூழப்பட்டது. வீட்டுக்கு வெளியே பள்ளி, நண்பர்கள், விளையாட்டு, தொலைக்காட்சி, இணையம் என அவர்களின் அன்றாட வாழ்க்கையின் பெரும்பகுதியும் ஆங்கிலத்திலேயே அமைந்திருக்கிறது.
அத்தகைய சூழலில், வாரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரங்களை மட்டும் ஒதுக்கி, தமிழ் எழுத்துகளை அறிமுகப்படுத்தி, வாசிக்கவும் எழுதவும் பேசவும் கற்றுக்கொடுப்பது சாதாரணமான பணியல்ல.
மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் பற்றி அப்போதுதான் சற்று ஆழமாகச் சிந்திக்கத் தோன்றியது.
பண்பாட்டு அடையாளம்:
அயல்நாட்டில் இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள், தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தமிழுக்காகச் செலவிடுகிறார்கள் என்பது வியப்பூட்டியது.
தமிழ் என்பது அவர்களுக்குப் பாடம் மட்டுமல்ல; அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டிய பண்பாட்டு அடையாளம்.
ஆனால், மாலை மூன்று மணியின் அயர்ச்சி என்னை அப்போது அவ்வளவு ஆழமாகச் சிந்திக்க அனுமதிக்கவில்லை. கூட்டம் எப்போது முடியும் என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்த எனக்குப் புத்துணர்ச்சி அளித்தது, இறுதியாகப் பேச வந்த ஓர் ஆசிரியரின் கேள்வி!
அவர் கேட்டது… “இலக்கணம் முதலில் வந்ததா? அல்லது இலக்கியம் முதலில் வந்ததா?”
அவ்வளவுதான்! அந்தக் கேள்வி என்னுடைய தூக்கக் கலக்கத்தை முற்றிலுமாக விரட்டிவிட்டது.
ஒரு பள்ளி வகுப்பறையில் எழுப்பப்பட்ட அந்தக் கேள்வி, என்னை மொழியின் வரலாற்றுக்குள் அழைத்துச் சென்றது.
என் வெப் உலக ஆய்வு உடனே சொன்னது: இலக்கியமே முதலில் தோன்றியிருக்க வேண்டும்!
மனிதன் முதலில் இலக்கண விதிகளைக் கற்றுக்கொண்டு பேசத் தொடங்கியிருக்க முடியுமா?
அன்பை வெளிப்படுத்துவதற்கும், துயரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும், மகிழ்ச்சியில் துள்ளுவதற்கும், காதலைச் சொல்லுவதற்கும், வீரத்தைப் பாடுவதற்கும் அவனுக்கு இலக்கணப் புத்தகம் தேவைப்பட்டிருக்காது.
மொழியியல் வரலாற்றின்படி, மனிதர்கள் பேசத் தொடங்கிய பின்னரே மொழியின் பயன்பாடுகள் படிப்படியாக வளர்ந்தன. உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்திய வாய்மொழிப் பாடல்கள், கதைகள், பழமொழிகள் போன்றவை இலக்கியத்தின் தொடக்க வடிவங்களாக அமைந்திருக்கலாம். இவற்றை ஒழுங்குபடுத்தி, மொழியின் அமைப்பையும் விதிகளையும் ஆராய்ந்து முறைப்படுத்தும் முயற்சிகளுக்குப் பின்னரே இலக்கணம் உருவானது.
தொல்காப்பியம் ஏன்?
அதாவது, மனிதனின் உணர்வு முதலில் பேசியது; அதன் பின்னர்தான் விதிகள் எழுதப்பட்டன!
தொல்காப்பியத்துக்கு முன்பே தமிழ் இலக்கியம் இருந்ததா?
ஆம், தமிழைப் பொறுத்தவரை இந்தக் கேள்வி இன்னும் சுவாரசியமானது.
தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியம், எழுத்து, சொல், பொருள் என மொழியின் பல்வேறு கூறுகளை விரிவாக விளக்குகிறது. அதுமட்டுமின்றி, அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை, காதல், வீரம், சமூக மரபுகள், கவிதை மரபுகள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள உதவுகிறது.
தொல்காப்பியம் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு இலக்கண நூலாக இருந்தாலும், அதில் வெளிப்படும் மொழியமைப்பும் இலக்கிய மரபைப் பற்றிய செய்திகளும் அதற்கு முன்னரே தமிழில் செழுமையான இலக்கியப் பயன்பாடுகள் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலுசேர்க்கின்றன.
தொல்காப்பியர் இலக்கண விதிகளை வகுத்தபோது, வெறுமையான மொழியொன்றை எதிர்கொண்டு அவற்றை உருவாக்கியிருக்க முடியாது.
தமிழின் பழமையைப் பேசும்போது, தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்பே தோன்றிய வாய்மொழி மரபுகளும் இலக்கிய வெளிப்பாடுகளும் காலப்போக்கில் நம்மை வந்தடைந்திருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு தாய் குழந்தையைத் தாலாட்டியபோது பிறந்த சொற்களும், காதலன் காதலியிடம் பகிர்ந்த உணர்வுகளும், வீரனைப் போற்றிப் பாடிய பாடல்களும், இயற்கையைக் கண்டு வியந்த மனிதனின் வெளிப்பாடுகளும் இலக்கியத்தின் தொடக்கப் புள்ளிகளாக இருந்திருக்கலாம்.
இலக்கணம் அவற்றுக்கு வடிவம் கொடுத்து செம்மை படுத்தியிருக்கும்.
அந்த ஆசிரியரின் கேள்வி என்னுள் இன்னொரு சிந்தனையையும் எழுப்பியது. அமெரிக்காவில் வளரும் நான்கு வயதுக் குழந்தைக்கு நாம் முதலில் எதைக் கொடுக்க வேண்டும்? எழுத்துகளையா, இலக்கண விதிகளையா, அல்லது தமிழின் மீது ஓர் ஈர்ப்பையா?
இனிமையை உணர்த்த வேண்டும்:
என்னைப் பொறுத்தவரை, குழந்தைக்கு முதலில் தமிழின் இனிமையை உணர்த்த வேண்டும்.
ஒரு தமிழ்ப் பாடலைக் கேட்டு மகிழவும், ஒரு கதையைப் புரிந்துகொள்ளவும், பாட்டியின் மடியில் அமர்ந்து பழமொழிகளைக் கேட்கவும், வீட்டில் தமிழில் பேசத் தயங்காத மனநிலையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்க வேண்டும்.
அதன் பின்னர் எழுத்தும் வாசிப்பும் இலக்கணமும் இயல்பாகவே கற்றுக்கொள்ளக்கூடியவையாக மாறும்.
உண்மையில், அன்று ஒருவர் பின் ஒருவராகப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்கள் என் பொறுமையைச் சோதித்துக்கொண்டிருந்தாலும், அவர்களின் உரைகளுக்குப் பின்னால் இருந்த உயரிய நோக்கத்தையும் உன்னதமான தமிழ்த் தொண்டையும் உணர்ந்தபோது என் எண்ணம் மாறியது.
அயல்நாட்டில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்து, மொழியின் மீதான பற்றையும் பண்பாட்டு வேர்களையும் பாதுகாக்க அவர்கள் மேற்கொண்டிருக்கும் பணி சாதாரணமானதல்ல; அது பாராட்டப்பட வேண்டிய உன்னதமான தமிழ்வளர்ப்புப் பணி என்பதை மனதார உணர்ந்தேன்.
அது மட்டுமல்ல; ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை!
இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சமூக அக்கறையுடன், கூடுதல் டாலர் வருவாயை நோக்கமாகக் கொள்ளாமல், தங்கள் நேரத்தையும் உழைப்பையும் முற்றிலும் தன்னார்வத்துடன் தமிழ்த் தொண்டுக்காக அர்ப்பணித்து வருகிறார்கள்.
மாணவர்களிடமிருந்து ஆண்டுதோறும் பெறப்படும் கட்டணங்கள் பாடநூல்கள் வழங்குதல், வார இறுதி வகுப்புகளுக்கான பாதுகாப்பான, வசதியான, குளிரூட்டப்பட்ட மற்றும் குளிர்காலத்தில் வெப்பமூட்டும் வசதிகளைக் கொண்ட பள்ளி வளாகத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட செலவுகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அதையும் தாண்டி மிஞ்சும் கையிருப்பு தொகையை, எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
வரவு செலவுக் கணக்குகளையும் தங்கள் இணையதளத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வது இப்பள்ளியின் நேர்மையான அணுகுமுறைக்குச் சான்றாகிறது.
தன்னலமற்ற சேவை:
தமிழைக் கற்பிப்பது மட்டுமல்ல, தமிழ்த் தொண்டைத் தன்னலமற்ற சேவையாகவும், சமூகப் பொறுப்பாகவும் முன்னெடுக்கும் இத்தகைய தன்னார்வலர்களின் பணி, பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதைவிட, அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதே பொருத்தமானது!
அமெரிக்காவில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் ஒரு கூடுதல் பாடமாக மட்டுமல்லாமல், தங்கள் குடும்பத்தின் வரலாற்றையும் தாத்தா–பாட்டியின் நினைவுகளையும் பெற்றோரின் வேர்களையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்.
அங்கே பகல், இங்கே இரவு… பேத்தி அங்கே தமிழ் கற்கத் தொடங்கியிருந்தாள். நான், தமிழின் பிறப்பையும் அதன் வளர்ச்சியையும் மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன்!
அந்த மாலை, நுண்மாண் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், எனக்கு தமிழின் தொன்மையைப் பற்றிய ஒரு புதிய சிந்தனையைப் பரிசளித்திருந்தார்கள்!
கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன: இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ’ என்பது 1978-ம் ஆண்டு வெளிவந்த ‘நிழல் நிஜமாகிறது’ என்ற தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலாகும் அது.
ஆனால் எனக்ககோ… இலக்கணம் மாறுதோ… இலக்கியமானது!