ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலை... உயருகிறது!: வணிக சிலிண்டர் விலையேற்றத்தால் பாதிப்பு ;வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்
புதுடில்லி: நாடு முழுதும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை 993 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு, 3,237 ரூபாயாக உயர்ந்ததால், ஹோட்டல் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வால், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதுடன், சிறிய அளவிலான ஹோட்டல் தொழில்கள் முடங்கவும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களின் போக்குவரத்து தடை பட்டதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் பொதுத் துறையை சேர்ந்த, 'இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில், வணிக சிலிண்டர் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக, 993 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 3,237 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஹோட்டல்களுக்கு, 70 சதவீதம் வரை மட்டுமே சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், பல ஹோட்டல்கள் மின் அடுப்புக்கு மாறிய நிலையில், டீ, காபி, இட்லி, தோசை, சாப்பாடு என, அனைத்து வகை உணவுப் பொருட்களின் விலைகளும் 5 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்தன.
தற்போது வணிக சிலிண்டர் விலை, 993 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளதால், உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
இது குறித்து ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் மேற்கு இந்திய செய்தி தொடர்பாளர் பிரதீப் ஷெட்டி கூறியதாவது:
வணிக சிலிண்டர் விலை மாதம் தோறும் உயர்த்தப்படுகிறது. கடந்த மார்ச்சில், 2,000 ரூபாய் அளவுக்கு இருந்த சிலிண்டர் விலை, தற்போது 3,000 ரூபாயை தாண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயரும். இதை வாடிக்கையாளர்களும் ஏற்க மாட்டார்கள்.
எனவே, மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு வணிக சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் ஹோட்டல் தொழில் பாதிக்கப்படாமல் இருக்கும். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால், இத்தொழிலில் ஈடுபட்டு வருவோர் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
தற்காலிகமாக மூடப்பட்ட ஹோட்டல்கள் நிரந்தரமாக மூடப்படும் சூழலுக்கு தள்ளப்படும். ஏராளமானோர் வேலை இழப்பர். சிறு உணவகம் நடத்துவோரின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகும்.
ஏற்கனவே, நாடு முழுதும் பல ஹோட்டல்களில் பணி நேரம் குறைக்கப்பட்டு விட்டது. விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், மீண்டும் ஒரு விலையேற்றத்தை நிச்சயம் எங்களால் தாங்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.