“எங்களை தொட்டுப்பார்த்தால் நடப்பதே வேறு..” மிரட்டல் விடுத்த கொள்ளை கும்பல்: தட்டி தூக்கிய போலீசார்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட கும்பலை கோவை போலீசார் கைது செய்தனர். விமானத்தில் பறந்து வந்தும் குற்றச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சினிமா பாணியில்
கோவையில் இருந்து தப்பிய இந்த கும்பல், தேனி மாவட்டத்திற்கு சென்று அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகளை கொள்ளையடித்தது. பின்னர் போலீசின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக டெல்லி சென்று தலைமறைவாகினர்.
டெல்லியில் சில மாதங்கள் பதுங்கி இருந்த இந்த கும்பல், கடந்த மாதம் விமானம் மூலமாக மீண்டும் தமிழகத்திற்கு திரும்பியது. தமிழகம் வந்த கையோடு சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் ஒருவரை கொடூரமாக கொலை செய்து விட்டு மீண்டும் கோவைக்குத் தப்பி வந்தனர்.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலை பிடிக்கக் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ரம்யாபாரதி, துணை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன், சப்-இன்ஸ்பெக்டர் தாமரை செல்வன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியில் பதுங்கி இருந்த கும்பலின் தலைவன் உள்பட 9 பேரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
கைதான 9 பேர் யார்..யார்..?
1. ஆகாஷ் (வயது 23), சிவகங்கை 2. மனோஜ் குமார்(26), தஞ்சாவூர், 3.முத்துப்பாண்டி (24), திண்டுக்கல் 4. அண்ணாமலை(25), கோவை சுந்தராபுரம் 5. அருண்பாண்டி(27) மதுரை 6.எஸ்.புவனேஷ்(22), மதுரை. 7. அருண்(20), சிவகங்கை, 8.ராமர்(23), மதுரை, 9.கோபி நாத்(23), திண்டுக்கல்.
இந்த கும்பலின் தலைவனான ஆகாஷ் மீது 25 குற்ற வழக்குகள் உள்ளன. அருண் மீது 31 வழக்குகளும், முத்துபாண்டி மீது 18 வழக்குகளும் உள்ளன. கூட்டாளிகள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கைதான 9 பேரிடம் இருந்தும் கஞ்சா, மெத்த பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் கைவரிசை காட்டிய இந்த கும்பல் கோவையில் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைரலான வீடியோ
இதற்கிடையில் இந்த ரவுடி கும்பல், “தங்களை தொட்டு பார்த்தால் நடப்பதே வேறு” என்று மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.