எம்பெட் ஃபைனேன்ஷியல் ஊழியர்கள் சம்பளம் கேட்டனர்
உள்ளூர் நிதித் தொழில்நுட்ப நிறுவனமான எம்பெட் ஃபேனேன்ஷியல் குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் மூன்று ஊழியர்கள் தங்களுக்குத் தரப்படவேண்டியதாகக் கூறப்படும் சம்பளத்தைக் கோரியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது ஊழியர்கள் சம்பளத்தைக் கோரியுள்ளனர்.
செப்டம்பர் 4, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த மூவரின் கோரிக்கைகளைப் பெற்றதாக சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. அக்கூட்டணி சமரசம் செய்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எல்லா ஒன்பது ஊழியர்களும் தாங்கள் பெறவேண்டிய சம்பளம் தொடர்பில் எம்பெட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை எட்டினர்.
ஆறு எம்பெட் ஊழியர்கள் சம்பளம் கோரியதாகவும் அவர்களுக்காகத் தாங்கள் சமரசம் செய்துவந்ததாகவும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி முன்னதாகத் தெரிவித்திருந்தது.
முன்னாள் எம்பெட் ஊழியர் ஒருவர் வேலை சம்பளக் கோரிக்கை மன்றங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரும் சம்பந்தப்பட்ட ஒன்பது பேரில் ஒருவரா என்பது தெரியவில்லை.
அந்த ஊழியர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை எம்பெட்டில் நிர்வாகியாக இருந்தார் என்று லிங்க்ட்டின் சமூக ஊடகக் கணக்கு ஒன்றின்வழி தெரியவந்தது.
அந்த ஊழியர் பின்னர் வேலை சம்பளக் கோரிக்கை மன்றங்களில் பதிவுசெய்த வழக்கை மீட்டுக்கொண்டார் என்றும் பிறகு எம்பெட்டுடன் சமரசம் செய்தார் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.