எல்லாரையும் இவ்வளவு நாள் நீ தான் முதுகுல குத்திருக்க.. அஜித் போட்டோவை கிழித்து ஆவேசமான ரசிகர்
சென்னை: நடிகர் அஜித் குமார் தனது ரசிகர் மன்றங்களை பல வருடங்களுக்கு முன்பே கலைத்து விட்டார். மேலும், தல என்றும் அழைக்க வேண்டாம் என்றும் கடவுளே அஜித் என கத்த வேண்டாம் என்றும் சினிமா ஒரு பொழுதுபோக்கு, நீங்க உங்க வேலையையும் குடும்பத்தையும் பார்த்து உயருங்க என பலமுறை சொல்லியுள்ளார்.
அஜித் குமார் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். மனசுக்கு பிடித்த விஷயத்தில் அவரவர் முன்னேறுவது சரியான விஷயம் தான்.
லண்டனில் இன்று நடைபெறும் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே அஜித் குமாரை பல ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதில், சிலர் அஜித் ரசிகர்களே இல்லை என்றும் திமுகவினர் அஜித் ரசிகர்கள் வேஷத்தில் பிரிவினையை உண்டாக்குகின்றனர் என்கிற கருத்துக்களையும் காண முடிகிறது.
ரசிக சண்டை: எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் காலத்துக்குப் பிறகு அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை தான் மிகப்பெரிய அளவில் இருந்தது. சிம்பு - தனுஷ் ரசிகர்கள் சண்டை கூட பெரிதாக இல்லை. நடிகர்களும் சில வசனங்கள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் தங்களது பலத்தை பெருக்க ரசிகர்களை பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகளும் கிளம்பின. "எனக்கொரு எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு உனக்கொரு உனக்கொரு தகுதி இல்லை" என்கிற அட்டாகசம் பாடல் விஜய்யை டைரக்ட் அட்டாக் செய்ததாக பஞ்சாயத்து வெடித்தது. புதிய கீதை படத்தில் "உன் தலை, வாலு, முண்டம் எல்லாத்தையும் கூட்டிட்டு வா" என விஜய்யும் பஞ்ச் பேசி நடித்திருப்பார்.
மங்காத்தா செட்டிலேயே: சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும் அஜித் மற்றும் விஜய் இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகவே திகழ்ந்தனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா பட செட்டில் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் வெளியான பின்னர் கூட ரசிகர்களின் சண்டை ஓய்ந்தபாடு இல்லை. விஜய் சினிமாவை விட்டு விலகி முதலமைச்சர் ஆன நிலையில் கூட அஜித்தையே திட்டும் அளவுக்கு ரசிகர்கள் சண்டை இன்னமும் வீரியமாகிக் கொண்டு தான் போகிறது.
அஜித் போட்டோவை கிழித்த ரசிகர்: "எல்லாரையும் இவ்வளவு நாள் நீ தான் முதுகுல குத்திருக்க.. உனக்கு போய் ரசிகனா இருந்ததுக்கு வெக்கபடுறேன் பூமறு @Akracingoffl சுயநலவாதிக்கு மறுஉருவம் நீ தான்.. போதும் டா🙏🙏🙏" என்கிற அளவுக்கு ரொம்பவே மோசமாக ட்வீட் போட்டு அஜித் குமாரின் போட்டோக்களையும் கிழித்து போட்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார் ஒரு அஜித் ரசிகர். கடந்த சில நாட்களாகவே பல அஜித் ரசிகர்கள் அஜித் தங்களை ஏமாற்றி விட்டார் என்றும் விஜய்யுடன் இப்படி இணக்கமாவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூச்சலிட்டு வருகின்றனர். குட் பேட் அக்லி படத்தில் கூட ஐ அம் வெயிட்டிங் நண்பா என்றே அஜித் சொல்லியிருப்பார்.
அஜித் - விஜய் நட்பு அஜித் ரசிகர்களை விட திமுக ஆதரவாளர்களுக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியுள்ளது என்றும் அவர்கள் தான் கதறுகிறார்கள் என்றும் கமெண்ட் பக்கத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களே கமெண்ட் போட்டு வருகின்றனர்.