Dorothy Latha Rao's Review
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் டோரதி திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. இந்திய சினிமாவிலேயே இது முக்கியமான படம் என்று பெரும்பாலானோர் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் நடிகை லதா ராவ் படத்தை பார்த்துவிட்டு சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டோரதி. இதில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ரிலீஸுக்கு முன்னதாகவே கனடாவின் டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அப்ளாஸை அள்ளியது படம். அதேபோல் தனுஷ், அனுராக் காஷ்யாப் ஆகியோரும் வெளியீட்டுக்கு முன்னதாகவே வெகுவாக பாராட்டியிருந்தார்கள். இவையெல்லாம் படத்துக்கு சூப்பர் ஹைப்பை கொடுத்திருந்தன.
மெகா ஹிட்டான படம்: ட்ரெய்லரை பார்க்கையில் இந்தப் படம் ஒரு பெண்ணுக்காக இரண்டு ஆண்கள் அடித்துக்கொள்ளும் சாதாரண கதைதான் போல என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். அந்த எண்ணத்தோடுதான் தியேட்டருக்குள்ளும் சென்றார்கள். ஆனால் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பேசியிருந்த விஷயமே வேறு. திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட திருநர்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், அவர்களின் காதலையும் பேசியிருந்தார். பெரும்பாலானவர்களுக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது.
குவியும் பாராட்டு: படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. மிஷ்கின் உள்ளிட்ட படைப்பாளிகளும் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். முற்போக்கான படம் வந்தால் பிரச்னையும் வரும் என்பதற்கு ஏற்ப; டோரதி படத்துக்கு எதிர்ப்பும் வந்தது. ஆனால் அது எடுபடவில்லை. இந்நிலையில் பிரபல நடிகையான லதா ராவ் டோரதி படம் பார்த்துவிட்டு தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
லதா ராவ் வீடியோ: அந்த வீடியோவில் அவர், "டோரதி படத்துக்கு போயிருந்தேன். கொஞ்சம் சர்ச்சையான படம். முதல் பாதி ஊர்க்கார படமாக தெரிந்தாலும் இரண்டாவது பாதி அக்மார்க் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைல் படம்தான். இறைவி படத்தில், 'ஆண்.. ஆ நெடில்' என வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதேமாதிரி பாலின பாகுபாடு குறித்த வசனம் வருகிறது. அதை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. திருநர்களும் நம்மை மாதிரி சக மனிதர்கள்தான் என்ற மைண்ட் செட் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது.
திருநங்கை, திருநம்பி என அழகான வார்த்தைகள் இருக்கும் சூழலில்; அவர்களை கொச்சையாக சொல்லி கூப்பிடுகிறோம். யாரும் விரும்பி திருநங்கையாக மாறுவதில்லை. இயற்கையாக அவர்கள் உடலுக்குள் நடக்கும் மாற்றம். இதுகுறித்து புரிதல் இல்லாத காலத்தில் அவர்களை கிண்டல் செய்தார்கள். இப்போதுகூட கிண்டல் செய்து, அசிங்கப்படுத்தி ஓரமாக ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களுக்கான மரியாதையை கொடுத்தால் தவறான வேலைகளை செய்யமாட்டார்கள். அவர்களும் ஒரு வாழ்க்கையை சந்தோஷமாக வாழட்டுமே. ஓர் செல் உயிரிக்கு கூட இங்கே இடம் உண்டு. அப்படியிருக்கையில் ஆறறிவு கொண்ட திருநர்களை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும். மாற்றம் நம்மிடமிருந்துதான் வர வேண்டும்" என்றார்.