Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
தமிழில் சுமார் 380 படங்களுக்கு மேல் இசையமைத்த தேவா இன்று உயிரிழந்த நிலையில், ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் சில இசையமைப்பாளர்களை எப்போதும் தவிர்க்கவே முடியாது. அப்படி ஒரு இசை சாம்ராஜ்யத்திற்குச் சொந்தக்காரர் தேனிசைத் தென்றல் தேவா. 75 வயதான தேவா சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தனக்கென சாம்ராஜ்யத்தை நடத்திய நிலையில், இன்று தேவா காலமானார்.
தேவநேசன் எனும் தேவா:
தேவாவின் மறைவு மொத்த தமிழ் திரையுலகத்தையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தேவநேசன் சொக்கலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட தேவா 1986ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மாட்டுக்கார மன்னாரு என்ற படம் மூலமாக இசையமைப்பாளராக அவர் அறிமுகமானார்.
அந்த படம் பெரியளவு வெற்றிபெறாத நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு பட வாய்ப்பே இல்லாமல் இருந்த தேவாவிற்கு 1989ம் ஆண்டு ராமராஜன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராமராஜன் திரையுலகில் உச்சத்தில் இருந்த தருணத்தில் தேவாவிற்கு கிடைத்த வாய்ப்பு அவர் திரையுலகில் அரசாட்சி செய்வதற்கான ஒரு அடித்தளமாக அமைந்தது.
வாழ்க்கை தந்த வைகாசி பொறந்தாச்சு:
இதையடுத்து, அவர் அடுத்தாண்டு இசையமைத்த வைகாசி பொறந்தாச்சு படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. விஜய், அஜித்தைக் காட்டிலும் மிகப்பெரிய நட்சத்திரமாக உலா வந்த பிரசாந்த் நாயகனாக அறிமுகமாகிய இந்த படத்தில் இடம்பிடித்த சின்ன பொன்னுதான், நீல குயிலே, தண்ணி குடம் எடுத்து தங்கம், ஆத்தா உன் கோயிலிலே பாடல்கள் ரசிகர்களிடம் தேவாவை கொண்டு சேர்த்தது.
அதன்பின்பு தேவாவிற்கு ஏறுமுகம் மட்டுமே இருந்தது. இசைஞானி இளையராஜா பல படங்களுக்கு இசையமைத்து மிகவும் பரபரப்பாக இருந்த தருணத்தில் அவரிடம் செல்ல முடியாத தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் தேவா பக்கம் வரத் தொடங்கினர்.
இரண்டே வருடங்களில் 25 படங்கள்:
அறிமுக இயக்குனர்கள், அப்போது வளர்ந்து வந்த கதாநாயகர்கள் அனைவரும் தேவாவின் இசைக்காக அவரிடம் வந்தனர். ராமராஜன், சரத்குமார் என பலரது படங்களுக்கும் தேவா இசையமைத்தார். இரண்டே வருடங்களில் 25 படங்களுக்கு இசையமைத்தார்.
கிராமிய கதைகளாகவே அவரிடம் தொடர்ந்து வந்ததால் அவரது பாடல்கள் பலவும் கிராமிய சாயல்களில் தொடக்கத்தில் வந்தது. இதனால், தேவாவின் பல பாடல்களை பலரும் இளையராஜாவின் பாடல்கள் என்று எண்ணும் சூழலும் உருவாகியது.
உச்சத்திற்கு கொண்டு சென்ற அருணாச்சலம்:
இளையராஜா கோலோச்சிய தருணத்தில் மறுபக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் வருகை இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்த தருணத்தில் இவர்கள் இருவருக்கும் சவால் அளித்து தனக்கென தனி பாதையில் தேவா பயணித்துக் கொண்டிருந்தார். அப்படி இருந்த தேவாவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது அண்ணாமலை.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு தேவாவிற்கு கிடைத்தது. அவரது பல ஆண்டு உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பாக அது அமைந்தது. அந்த படத்தின் இமாலய வெற்றிக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது தேவாவின் இசை.
தேவா தந்த டைட்டில் கார்ட் இசை:
அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்திற்கு தேவாவின் பிஜிஎம் இன்றளவும் பிரபலம் ஆகும். ரஜினியின் நடிப்பிற்கும், அவரது ஸ்டைலுக்கும் தேவாவின் இசை மிகப்பெரிய பலத்தை உண்டாக்கியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற டைட்டில் கார்டை முதன்முறையாக இசையுடன் இந்த படத்தில்தான் போட்டிருப்பார்கள். ரஜினிக்கு தேவா இசையமைத்த இந்த டைட்டில்கார்ட் தான் ரஜினியின் அடுத்தடுத்த படங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு பிறகு உச்சத்திற்குச் சென்ற தேவா காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து விதமான படங்களுக்கும் இசையமைக்கத் தொடங்கினார். 90 முதல் 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கே ஒரு பொன்னான காலம் எனலாம். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.ராஜ்குமார். பரணி, பரத்வாஜ், வித்யாசாகர் என இசையமைப்பாளர்கள் ராஜாங்கம் நடத்திய காலம். இவர்கள் அனைவருக்கும் சவால் அளிக்கும் வகையில் தேவாவும் தனது இசையால் தனி ராஜாங்கம் நடத்தி அனைவரையும் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்.
ஆஸ்தான இசையமைப்பாளர்:
அண்ணாமலை படத்திற்கு பிறகு விஜயகாந்த், பிரபு, அர்ஜுன் போன்ற உச்சநட்சத்திரங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மெல்லிசை மட்டுமின்றி தேவாவின் குத்துப்பாடல்களும் ரசிகர்களை கட்டிப்போட்டது.
ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், பிரபு என அப்போதைய உச்சநட்சத்திரங்களுக்கு இசையமைத்த தேவா அப்போதைய அடுத்த தலைமுறை கதாநாயகர்களின் படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக உருவெடுக்கத் தொடங்கினார்.
ரசிகன் படத்தில் முதன்முறையாக தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு இசையமைக்கத் தொடங்கினார். அப்போது வளர்ந்து வந்த கதாநாயகர்களாக இருந்த விஜய், அஜித், பிரசாந்த் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து அவர்களை காதல் நாயகர்களாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார். 1992ம் ஆண்டு 25வது படத்திற்கு இசையமைத்த தேவா, 1995ம் ஆண்டு தன்னுடைய 100வது படமாக வேலுச்சாமி படத்திற்கு இசையமைத்தார்.
இளைஞர்களை கட்டிப்போட்ட தேவா:
தேவாவின் இசைக்கான ரசிகர்கள் கூட்டம் சற்றும் குறையாமலே இருந்து வந்ததை உணர்ந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரிடமே குவிந்தனர். அஜித்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்த ஆசை படத்திற்கு தேவா அமைத்த இசைக்கு ஏராளமான விருதுகளும் குவிந்தது. விஜய், அஜித் ஆகிய இருவருக்கும் தொடக்க காலத்தில் தேவாவே ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார்.
காதல், குத்துப்பாடல்கள் என்று மட்டுமே கேட்டிருந்த ரசிகர்களுக்கு கானா பாடல்களையும் கொண்டு சேர்த்தவர் தேவா. இதனால், கானா என்றாலே தேவாதான் என்று அனைவரது நெஞ்சிலும் ஆழமாக பதிந்துள்ளது. ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் வளர்ந்து வந்த நடிகர்கள் படங்களுக்கும் இசையமைத்து அவர்கள் படங்கள் வெற்றி பெறவும் ஒத்துழைப்பு அளித்தார்.
உச்ச நட்சத்திரங்களுக்கு மறக்க முடியாத இசை:
கமல்ஹாசனுக்கு மட்டும் இவர் இசையமைப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. கமல்ஹாசனுடன் முதன்முறையாக அவ்வை சண்முகி படத்தில் இணைந்து பணியாற்றினார். கமல்ஹாசனுடன் இணைந்து அவ்வை சண்முகி, பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ரஜினிக்கு அண்ணாமலை மட்டுமின்றி அருணாச்சலம், பாட்ஷா படங்களுக்கும் இசையமைத்தார். இதில் பாட்ஷா படத்திற்கு தேவா அமைத்த பின்னணி இசைதான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று ரஜினியே பாராட்டியுள்ளார்.
கில்லாடி தேவா:
ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒவ்வொரு வகையான இசையில் மட்டும் கோலாேச்சி வந்த நிலையில், தேவா மட்டுமே காதல், கானா, குத்துப்பாட்டு, சோகப்பாடல் என அனைத்து விதமான சூழல் பாடல்களிலும் கோலோச்சியுள்ளார். இதனால்தான் தேவா இசையமைத்த பல பாடல்களின் இசை வேறு ஒருவரின் இசை என்று ரசிகர்கள் குழம்பிக் கொள்கின்றனர். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப ரசிகர்களின் நாடித்துடிப்பிற்கு ஏற்ப இசையமைப்பதில் தேவா கில்லாடி ஆவார்.
இதனால்தான் எருக்கஞ்செடி ஓரம் இறுக்கிப்பிடிச்ச என்ற பாடல் இசையமைத்த தேவா, குஷி படத்தில் கட்டிப்பிடி கட்டிப்பிடி என்ற கவர்ச்சிப்பாடலையும் இசையமைத்திருப்பார். 1998ம் ஆண்டே 200 படங்களுக்கு இசையமைத்த தேவா 2000த்திற்கு பிறகு காதல் படங்களுக்கு ஏராளமாக இசையமைத்தார்.
யுவன்ஷங்கர்ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்கள் கோலோச்சத் தொடங்கிய பிறகு தேவாவும் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக அவர் சாருகேசி என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களுக்கும் தேவா இசையமைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமின்றி தேவா பாடகராகவும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ளார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு எப்போதும் ஒரு பேரிழப்பே ஆகும்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி