சவுதி விமான நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 3 பேர் பலி; 36 பேர் காயம்
சவுதி விமான நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 3 பேர் பலி; 36 பேர் காயம்
ரியாத்: ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். சவுதி அரேபியாவை குறிவைத்தும் அடிக்கடி டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் ரியாத் மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அபா சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு டிரோன்கள் மூலம் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், விமான நிலைய வளாகத்தில் இருந்த 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பயணிகள், பணியாளர்கள் உட்பட 36 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாசவேலைக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து, சவுதி பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டு, வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதலுக்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.