சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்
சாந்தி நாராயணசாமியின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Published : September 20, 2026 at 3:35 PM IST
சென்னை: சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர் பிரபுவின் சகோதரியுமான சாந்தி வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக இன்று காலாமானார்.
தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக வலம் வந்த சிவாஜி கணேசன், கமலா அம்மாள் தம்பதியினருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். இவர்களில், சிவாஜியின் மூத்த மகளான சாந்தி 1953 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் (சாந்தி) பெயரில் சென்னை அண்ணா சாலையில் திரையரங்கு ஒன்றையும் சிவாஜி கணேசன் திறந்தார்.
சென்னையின் முதல் ஏசி வசதிக் கொண்ட திரையரங்கம் இதுவே ஆகும். இதனை 1961 ஜனவரி 12 அன்று அப்போதைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார். மேலும், சாந்தியின் தயாரிப்பில் 1974 இல் வெளியான தங்கப்பதக்கம் சூப்பர்ஹிட்டானது.
சாந்திக்கும், நாராயணசாமி என்பவருக்கும் 1968 ஆம் ஆண்டில் திருமணமானது. இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சாந்தி நாராயணசாமி தமது 73-வது வயதில் இன்று (செப்டம்பர் 20) காலமானார்.
இறுதி சடங்கு
சாந்தியின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சொத்துப் பிரச்சனை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஜூலை 21 அன்றும், அவரது மனைவி கமலா கணேசன் 2007லும் காலமானார்கள். இவர்களின் மறைவுக்கு பிறகு, குடும்பச் சொத்துப் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் சாந்திக்கும், அவரது சகோதரி ராஜ்விக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. ஆகையால், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடினர்.