📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 09, 2026 05:04 AM

சிங்கப்பூரின் சைவ சமயப் பணிகள்: தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புரை

சிங்கப்பூரின் சைவ சமயப் பணிகள்: தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புரை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை சார்பில் ‘வியாழவட்டம்’ வாரக்கருத்தரங்கின் 124ஆவது சிறப்புத் தொடர் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.

துறைத் தலைவர் முனைவர் குறிஞ்சிவேந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் முன்னாள் மூத்த ஊடகவியலாளரும் தமிழாசிரியரும், சிங்கப்பூர் சைவ சித்தாந்த சங்கத்தின் தலைவியுமான முனைவர் மீனாட்சி சபாபதி, தென்கிழக்காசியாவில் சைவ சமயப்பரவல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தஞ்சைப் பல்கலையின் முதுகலை, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஏறக்குறைய 70 பேர் பங்கேற்ற இக்கருத்தரங்கில், இணையத்தில் எளிதாகக் கிடைக்கக்கூடிய வரலாறு சார்ந்த தகவல்களைத் தாண்டி, தற்போதைய காலகட்டத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் சைவ சமயத்தின் செயல்பாடு குறித்து முனைவர் மீனாட்சி எடுத்துரைத்தார்.

குறிப்பாக, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள சைவ அமைப்புகளின் செயல்பாடுகள், ஓதுவார்களின் பணிகள், சிங்கப்பூரின் செண்பக விநாயகர் கோவிலிலும் தர்ம முனீஸ்வரர் ஆலயத்திலும் கற்பிக்கப்படும் சைவ சித்தாந்த வகுப்புகள் ஆகியவை குறித்து அவர் விளக்கினார். மியன்மார், தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் சைவத்தின் தற்போதைய நிலை குறித்துப் படங்களுடன் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூரில் 45 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருமுறை மாநாடுகள், தெண்டாயுதபாணி ஆலயம், ருத்ர காளியம்மன் கோவில் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முனைவர் மீனாட்சி சுட்டினார்.

மேலும், மலேசிய சைவப் பேரவை ஆண்டுதோறும் நடத்தும் சித்தாந்த மாநாடுகள், முனைவர் ஆறு.நாகப்பனும் அவர்தம் குழுவினரும் நடத்தும் உலகளாவிய சைவ சமய வகுப்புகள் போன்றவை குறித்தும் அவர் மாணவர்களுக்கு விளக்கினார். சைவ சித்தாந்த மெய்யியல் கூறுகளான ‘பதி, பசு, பாசம்’ போன்றவற்றையும் அவர் சுருக்கமாக விளக்கியிருந்தார்.

அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வன் செ.சங்கிலிண்டன் வேளாங்கண்ணி வரவேற்புரையாற்ற, செல்வி இரா.தமிழ்மதி நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் மீனாட்சியால் இப்பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட சே வெ சண்முகம் - ருக்மணியம்மாள் அறக்கட்டளையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சொற்பொழிவைக் கேட்ட மாணவர்கள் பலர் தேவாரம், சைவ சித்தாந்தம் ஆகியவற்றைக் கற்க மிகுந்த ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து, அந்த அறக்கட்டளை நிதியைக் கொண்டு வருகிற டிசம்பர் முதல் ஓதுவார்களை வரவழைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவார வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.