சிங்கப்பூரில் பிரெஞ்சு பாலாடைக்கட்டி மீட்டுக்கொள்ளப்பட்டது
சிங்கப்பூரில் விற்கப்படும் பிரெஞ்சு முத்திரைக் கொண்ட பதப்படுத்தப்படாத இரண்டு பாலாடைக் கட்டிப் பொருள்கள் மீட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் அபாயமான கிருமிகள் இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஃப்ரோமேஜரி கில்லோட் நிறுவனத்தின் இரண்டு தயாரிப்புகளான ‘கேமம்பெர்ட் சுப்பீரியர் ஓ லேட் க்ரூ’, ‘பெர்ட்ரான்ட் பெரே & ஃபில்ஸ் கேமம்பெர்ட் ஓ லேட் க்ரூ’ ஆகிய பாலாடைக் கட்டிப் பொருள்கள் மீட்டுக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு இம்மாதம் 9ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
இந்த இரண்டு தயாரிப்புகளின் தொகுதி எண் 232511ஐச் சேர்ந்தவை என்றும் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் அவற்றை பயன்படுத்தவேண்டும் என்று அந்தப் பொருள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைப்பு சுட்டியது.
‘ஷிகா’ எனும் நச்சுத்தன்மையை உருவாக்கக்கூடிய ‘எஷெரிச்சியா கோலாய்’ (ஸ்டெக்) எனும் கிருமியின் காரணமாக, உணவு, தீவனத்திற்கான ஐரோப்பிய விரைவு எச்சரிக்கை அமைப்பு தெரிவித்தது.
‘ஸ்டெக்’ வகை கிருமியால் பாதிக்கப்பட்டோர் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு எச்சரித்தது.
கிருமியால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதுடன் அவற்றிலிருந்து துர்நாற்றம் வராமலும் இருக்கலாம் என்ற அமைப்பு, அவற்றால் மோசமான பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றது.
‘ஸ்டெக்’ கிருமித்தொற்று ‘ஹீமோலிடிக் யுரேமிக் சிண்ட்ரோம்’ எனும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அது சிறுநீரக செயலிழப்பு, நிரந்தர ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் மரணத்துக்கும் இட்டுசெல்லலாம் என்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையங்கள் குறிப்பிட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சிங்கப்பூருக்குள் பாதிக்கப்பட்ட பாலாடைக் கட்டிப் பொருள்களை இறக்குமதி செய்த கோல்ட் ஸ்டோரேஜ், லிட்டில் ஃபார்ம்ஸ் ஆகிய அங்காடிகள் அவற்றை மீட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.