சிங்கப்பூர் உள்துறைக் குழு அதிகாரிகளுடன் ‘ஏஐ’ இயந்திர மனிதர்கள் களமிறக்கம்
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதர்கள் விரைவில் சிங்கப்பூர் உள்துறைக் குழு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படவுள்ளன.
அபாயகரமான பொருள்கள் கையாளும் பிரிவு, சிறைத்துறை மற்றும் தடயவியல் துறை அதிகாரிகளுடன் அந்த இயந்திர மனிதர்கள் பணியாற்றவுள்ளன.
2028ஆம் ஆண்டிக்குள் உண்மையான செயல்பாட்டுச் சூழல்களில் உள்துறை அதிகாரிகளுடன் தோளோடு தோள் நின்று அந்த இயந்திர மனிதர்கள் பணியாற்றும் என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று (செப்டம்பர் 30) ஒன்-நார்த் பகுதியில் அமைந்துள்ள ‘ஹோம் டீம் ஹியூமனாய்ட் ரோபோட்டிக்ஸ் சென்டர்’ தொடக்க விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் டோங் உரையாற்றினார்.
அந்த இயந்திர மனிதர்களை உருவாக்குவதன் நோக்கம் அதிகாரிகளுக்குத் துணையாக இருப்பதுதானே தவிர, அவர்களுக்குப் பதிலாகச் செயல்பட அன்று என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
“வழக்கமான, கடினமான உடலுழைப்பு தேவைப்படும் அல்லது அபாயகரமான பணிகளை இந்த இயந்திர மனிதர்கள் ஏற்றுக்கொள்ளும். இதனால், எங்களது அதிகாரிகள் அனுதாபம், தீர்க்கமான முடிவு மற்றும் தலைமைத்துவ பண்புகள் தேவைப்படும் பணிகளில் முழுக் கவனம் செலுத்த முடியும்,” என்று அமைச்சர் டோங் குறிப்பிட்டார்.
பொதுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் இயந்திர மனிதர்களை உருவாக்க, உள்துறைக் குழு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பால் நடத்தப்படும் அதற்கான மையத்திற்காக ஏறத்தாழ $100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கான அவசர மருத்துவ வாகன மறுவிநியோகம், அபாயகரமான பொருள்கள் கையாளும் நடவடிக்கைகள், குண்டுவெடிப்புக்குப் பிந்தைய காவல்துறையின் புலனாய்வுப் பணிகள் மற்றும் சிறைத்துறையின் சிறை அறைச் சோதனைகள் ஆகியவை இந்த இயந்திர மனிதர்களின் உத்தேசப் பணிகள்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
வேதிப்பொருள் கசிவுகள் மற்றும் குண்டுவெடிப்புகளின் பின்னணியில், அதிகாரிகள் அபாயகரமான பொருள்களைக் கையாள வேண்டி இருப்பதுடன் இரண்டாம் கட்ட வெடிப்பு அல்லது கட்டட இடிபாடுகளின் ஆபத்தையும் எதிர்கொள்கின்றனர்.
ஆனால், இத்தகைய இயந்திர மனிதர்களைப் பயன்படுத்துவதன் மூலம் அபாயகரமான பணிகளை அவையே செய்து முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிகாரிகள் தேவையில்லாத ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதுடன் பிற முக்கியப் பணிகளைச் செய்யவும் வழிவகுக்கும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய ஆபத்தான சூழல்களில் அதிகாரிகளுக்குப் பதிலாக இயந்திர மனிதர்களே நேரடியாகக் களமிறக்கப்படும் என்றும் அமைச்சர் டோங் கூறினார்.