📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 30, 2026 09:03 PM

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைப் புருணை பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முடாடீ பில்லா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) இஸ்தானாவில் சந்தித்துள்ளார்.

12வது சிங்கப்பூர்- புருணை இளம் தலைவர்கள் திட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் பட்டத்து இளவரசர் பில்லா சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார்.

புருணை பிரதமர் அலுவலகத்தின் மூத்த அமைச்சருமான இளவரசர் பில்லாவிற்கு மூத்த அமைச்சர் லீ சியென் லூங் விருந்தளித்து உபசரித்தார்.

பட்டத்து இளவரசருடன் நன்கு உரையாடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட திரு லீ, இருநாட்டில் உள்ள வளர்ச்சி குறித்து இருவரும் பேசியதாகக் கூறினார்.

சிங்கப்பூரும் புருணையும் எவ்வாறு அவற்றின் உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்தும் பேசப்பட்டது என்றார் திரு லீ.

“இரு தலைவர்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளின் அடிப்படையில் நீண்டகால பங்காளித்துவம் அமைக்கப்பட்டது. அத்தகைய உறவைத் தொடர்ந்து பேணி வளர்க்கவேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையிலும் அது வலுப்படும்,” என்றார் அவர்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகமது உள்ளிட்டோர் விருந்துபசரிப்பில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூருக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் பில்லாவிற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் உள்ளிட்ட பிற சிங்கப்பூர்த் தலைவர்கள் விருந்துவைத்து கௌரவிப்பர் என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2013ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இளம் தலைவர்கள் திட்டம், இரு நாட்டுத் தலைவர்களும் விருப்பமுள்ள அம்சங்களில் பங்காளித்துவத்தை வலுப்படுத்திக்கொள்ள தளம் அமைக்கிறது.

மின்னிலக்க, பசுமைப் பொருளியல்கள், நிதி, தற்காப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும்.

பிரதமர் வோங்கும் இளவரசர் பில்லாவும் வருடாந்தர திட்டத்திற்கு இணைந்து தலைமை தாங்குவது இது நான்காவது முறை.

இளவரசர் பில்லாவுடன் புருணை போக்குவரத்து அமைச்சரும் தகவல் தொடர்பு அமைச்சருமான திரு அவாங் முகமது ரிசாவும் பிற மூத்த அதிகாரிகளும் வருகை புரிந்துள்ளனர்.