சிங்கப்பூர் ஏஐ உள்கட்டமைப்பு: மதிப்பை உச்சப்படுத்துதல்
தென்கிழக்காசியச் சந்தைகள் தங்களுடைய பலத்திற்கு ஏற்ப செயல்படுவதால், சிங்கப்பூர் தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பின் கணினித் திறனை வெறுமனே அதிகரிப்பதற்குப் பதிலாக, அதன் மதிப்பை உச்சநிலைக்குக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியெட் ஹவ் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (செப்டம்பர் 23) ஆசிய-பசிபிக் நிதி மாநாட்டில் ஆற்றிய சிறப்புரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
“கணினித் திறனை அதிகரிப்பது சிங்கப்பூரின் நோக்கமல்ல; அதிலிருந்து அதிகபட்ச மதிப்பைப் பெறுவதே எங்கள் இலக்கு” என்று துணை அமைச்சர் டான் கூறினார்.
தென்கிழக்காசியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பின் எதிர்காலம் வட்டார அளவிலானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கான போட்டியில் தரவு நிலையங்களை வைத்து மட்டுமே வெல்ல முடியாது. கணினித் திறன், எரிசக்தி கட்டமைப்பு, மூலதனம், வணிகங்கள் ஆகியவற்றை நாம் எவ்வளவு சிறப்பாக இணைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வெற்றி அமையும்,” என்று திரு டான் விளக்கினார்.
செயற்கை நுண்ணறிவுப் பொருளியலுக்குத் தேவையான முழுமையான உள்கட்டமைப்பையும் ஆசியான் நாடுகள் கூட்டாக வழங்க முடியும் என்பதால், அனைத்து வேலைகளும் சிங்கப்பூரிலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
சிங்கப்பூரில் தற்போது ஒரு கிகாவாட்டை விட அதிகமான தரவு மையத் திறன் உள்ளது. இருப்பினும், மின்சாரம், நிலம், நீர் போன்றவற்றில் கட்டுப்பாடுகளை எதிர்நோக்குகிறது.
“ஒரு நாடு மட்டும் அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டியதில்லை. சில நாடுகள் எரிசக்தி, இடவசதியை வழங்கும். அதே வேளையில், மற்ற நாடுகள் திறமையாளர்களையும் தொழில்துறை ஆற்றலையும் வழங்கும்,” என்று திரு டான் கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
வலுவான பாதுகாப்பு, மீள்திறன், நிலைத்தன்மைத் தேவைகள் நீண்டகால மின்னிலக்க வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதோடு, நெடுநாள் முதலீட்டாளர்களுக்கு அதிக நிச்சயத்தன்மையை வழங்குவதாகவும் திரு டான் குறிப்பிட்டார்.