சிங்கப்பூர் செல்ல முயன்ற ஆஸ்திரேலிய பயணியிடம் ரூ.20 லட்சம் பறிமுதல்
சிங்கப்பூர் செல்ல முயன்ற ஆஸ்திரேலிய பயணியிடம் ரூ.20 லட்சம் பறிமுதல் - பயணம் ரத்து!
கைப்பையை திறந்து பார்த்து பரிசோதித்த போது, ஆஸ்திரேலியா நாட்டு டாலர் கரன்சி, இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.20 லட்சம் பணம் இருந்தது.
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல முயன்ற ஆஸ்திரேலிய பயணியிடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர் செல்லும், தனியார் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 1.15 மணிக்கு, சென்னையில் இருந்து, புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின், உடைமைகளையும், பயணிகளையும், விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரிகள், பரிசோதித்து பயணிகளை, விமானத்திற்கு ஏற அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமை பெற்ற, இந்தியரானா ராமச்சந்திரன் (38) என்ற பயணி, இந்த விமானத்தில், சிங்கப்பூர் வழியாக, ஆஸ்திரேலியா செல்வதற்கு வந்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள், பயணி ராமச்சந்திரனின், கைப்பையை ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அப்போது பயணியின் கைப்பைக்குள், வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருந்ததை, கண்டுபிடித்தனர்.
அதோடு பயணி ராமச்சந்திரனின் விமான பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புடைய ஆஸ்திரேலியா நாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு மேல் நடவடிக்கைக்காக பயணியையும், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தையும்,சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியிடம் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.