📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 07, 2026 03:04 PM

‘சிசிஏ’ வீட்டில் அவசர அழைப்பு விசையில் கோளாறு: விசாரணை தொடர்கிறது

‘சிசிஏ’ வீட்டில் அவசர அழைப்பு விசையில் கோளாறு: விசாரணை தொடர்கிறது

சிங்கப்பூரில் சிசிஏ எனப்படும் சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடு ஒன்றில் இருக்கும் அவசர அழைப்பு விசை சரியாகச் செயல்படாதது குறித்து விசாரணை நடத்துமாறு வேன்கார்ட் ஹெல்த்கேர் நிறுவனத்திடம் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

வேன்கார்ட் ‌ஹெல்த்கேர், சிங்கப்பூரின் முதல் ஆதரவுடன் வாழ்வதற்கு உகந்த அரசாங்க வீட்டுத் திட்டத்தை நடத்துகிறது. சம்பந்தப்பட்ட வீட்டில் 85 வயது மாது அவசர அழைப்பு விசையை அழுத்திய பிறகும் ஏன் அவருக்கு உதவி கிடைக்கவில்லை என்பதை அறிய விசாரணை நடத்தப்படுகிறது.

அந்த மாது கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி குளியலறையில் வழுக்கி விழுந்ததால் அவரின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரின் வீடு அமைந்துள்ள ஹார்மனி@புக்கிட் பாத்தோக் திட்டத்துக்கு அவசர மருத்துவ வாகனம் அழைக்கப்பட்டிருந்தது.

மாது விழுந்து இரண்டு மணிநேரத்துக்கு மேல்தான் அந்த வாகனம் அழைக்கப்பட்டது. அவர் உதவி கோரி குரல் கொடுத்ததை அண்டைவீட்டார் கேட்ட பிறகே மருத்துவ உதவி வாகனம் அழைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங், எழுத்து வடிவில் நாடாளுமன்றத்துக்கு அளித்த பதிலில் அந்த மாதிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

“இது நடந்திருக்கக்கூடாது. இச்சம்பவம் அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எவ்வளவு மனவுளைச்சலை அளித்திருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்றார் திரு ஓங்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஏண்ட்ரே லோ கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். சிசிஏ இருக்கும் 24 மணிநேர அவசர உதவி முறைக்கு உள்ள சேவைத் தரநிலைகள் போன்றவற்றைப் பற்றி அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து திரு ஓங், சமூகப் பராமரிப்பு வீடுகள் மருந்தக, மருத்துவச் சேவைகளை வழங்கவில்லை என்றும் அவை சமூக, இல்லப் பராமரிப்புச் சேவைகளை அளிக்கின்றன குறிப்பிட்டார். அதனால் அவை சுகாதாரப் பராமரிப்புச் சேவைத் தட்டத்தின்கீழ் வரமாட்டா என்று அவர் விளக்கினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மாறாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களின்வழி சேவைகளுக்கான நிபந்தனைகளை சுகாதார அமைச்சு தீர்மானிப்பதாக அவர் தெரிவித்தார். 24 மணிநேரத்துக்கு வழங்கப்படும் சேவைகளை துரிதமாக, ஆக்ககரமாக, நிபுணத்துவமிக்க முறையில் அளிப்பதும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.