சிங்கப்பூரின் வறண்ட நிலை இன்னும் ஒரு மாதம் நீடிக்கலாம் என முன்னுரைப்பு
சிங்கப்பூரில் தற்போது நிலவும் கடும் வெப்பம் தணிய இம்மாத இறுதி அல்லது நவம்பர் மாதத் தொடக்கம் வரை காத்திருக்க வேண்டி இருக்கும் என்றும் வழக்கத்திற்கு மாறான, கடுமையான சூப்பர் எல் நினோ வானிலையே அதற்கு முக்கியக் காரணம் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் வறண்ட பருவகாலம் முடிவுக்கு வருவதன் மூலம் சிங்கப்பூரில் அதிக மழை பொழிய வாய்ப்புள்ளதா என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் ஆய்வு நிலையம் இதனைத் தெரிவித்தது.
தேசிய சுற்றுச்சூழல் வாரியத்தின்கீழ் இயங்கும் வானிலை ஆய்வு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “பொதுவாக ‘கடுமையான எல் நினோ தாக்கங்கள், தெற்கு ஆசியான் வட்டாரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட பருவத்தின் முடிவைத் தாமதப்படுத்தும் போக்கைக் கொண்டுள்ளன,” என்றார்.
“இந்த ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த ஈராண்டுகளைவிடத் தாமதமாக, அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில்தான் இந்த வானிலை மாற்றம் நிகழும் என நாங்கள் கணிக்கிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வழக்கமாக, வறட்சியான காலகட்டத்தில் பெய்யக்கூடிய தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் மாதத்திற்குள் குறையத் தொடங்கும். மழைக்காலத்தைக் கொண்டுவரும் வடகிழக்கு பருவமழை நவம்பர் இறுதியில் தொடங்கும்.
ஆனால், இந்த ஆண்டு நிலவும் ‘சூப்பர் எல் நினோ’ வானிலை நிகழ்வு, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனீசியா உள்ளிட்ட பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வழக்கமான வறட்சிக் காலத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுவே இந்தோனீசியாவில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான காட்டுத்தீ பரவ முக்கியக் காரணமாக அமைந்தது.
தெற்கிலிருந்து வீசிய காற்று இந்த புகையைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்ததால், செப்டம்பர் மாதம் இங்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தற்போதைய எல் நினோவின் தாக்கங்கள் குறித்து ஆசிய - ஆஸ்திரேலியப் பருவமழைக்கான உலகப் பருவநிலை ஆராய்ச்சித் திட்டத்தின் பணிக்குழுவைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் கோ தியே யோங் விளக்கினார்.
“எல் நினோ நிகழ்வுகள் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மேகக் கூட்டங்களைக் குறைக்கும் போக்கைக் கொண்டுள்ளன. அதன் காரணமாக மழைப்பொழிவு குறைவதுடன், புவி மேற்பரப்பு வெப்பநிலையும் அதிகரிக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.