📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 15, 2026 02:03 AM

சென்னைக்கு தடையின்றி குடிநீர்: ரூ.3,108 கோடியில் திட்டம்

சென்னைக்கு தடையின்றி குடிநீர்: ரூ.3,108 கோடியில் திட்டம்

சென்னை: சென்னை மாநகருக்கு தடை​யின்றி குடிநீர் வழங்​கு​வதற்​காக ரூ.3,108 கோடி​யில் பிர​தான சுற்​றுக்​குழாய் அமைக்​கும் திட்​டத்​துக்கு முதல்​வர் விஜய் அடிக்​கல் நாட்​டி​னார். மேலும், வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, பள்​ளிக்​கரணை மற்​றும் ஒக்​கி​யம் மடுவு பகு​தி​களில் நடை​பெற்​று​வ​ரும் வெள்​ளத் தடுப்​புப் பணி​களை​யும் அவர் நேரில் ஆய்வு செய்​தார்.

சென்​னைக்கு குடிநீர் வழங்​கு​வதற்​காக, பூண்​டி, புழல், சோழ​வரம், செம்​பரம்​பாக்​கம் ஏரி​கள் மற்​றும் கடல்​நீரைக் குடிநீ​ராக்​கும் நிலை​யங்​கள் உட்பட 9 குடிநீர் ஆதா​ரங்​கள் உள்​ளன. இதன்​மூலம் சென்னை பெருநகர குடிநீர் வழங்​கல் வாரி​யம் சென்​னை​யில் உள்ள சுமார் 91 லட்​சம் குடும்​பங்​களுக்கு தின​மும் 1,260 மில்​லியன் லிட்​டர் குடிநீரை வழங்கி வரு​கிறது. தற்​போதுள்ள அமைப்​பில் ஒரு நிலை​யத்​தில் இருந்து குறிப்​பிட்ட பகு​தி​களுக்கு மட்​டுமே குடிநீர் விநி​யோகிக்​கப்​படு​கிறது. இதனால் பற்​றாக்​குறை ஏற்​படும் பகு​தி​களுக்​கு, மற்ற ஆதா​ரங்​களில் இருந்து உபரிநீரை மாற்ற முடி​யாத சூழல் நில​வு​கிறது.

இதை சரிசெய்​யும் வித​மாக முந்​தைய திமுக ஆட்​சி​யில் ‘பிர​தான சுற்​றுக்​குழாய் திட்​டம்’ (ரிங் மெயின் சிஸ்​டம்) ஆசிய வளர்ச்சி வங்​கி​யின் நிதி​யுத​வி​யுடன் ரூ.3,108 கோடி​யில் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டது. இதற்​கான அடிக்​கல் நாட்டு விழா சோழிங்​கநல்​லூரில் உள்ள குடிநீரேற்​றும் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் விஜய் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்டு திட்​டத்​துக்கு அடிக்​கல் நாட்​டி​னார். தொடர்ந்து திட்​டத்​தின் செயல்​பாடு​கள் குறித்து அதி​காரி​கள் முதல்​வர் விஜய்க்கு விளக்​கம் அளித்​தனர்.

சிறப்​பம்​சங்​கள்

இத்​திட்​டத்​தின் வாயி​லாக 5 குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள், கடல்​நீரைக் குடிநீ​ராக்​கும் 3 நிலை​யங்​கள் மற்​றும் தற்​போது பேரூரில் அமைக்​கப்​பட்டு வரும் 400 மில்​லியன் லிட்​டர் கடல்​நீரைக் குடிநீ​ராக்​கும் நிலை​யம் என மொத்​தம் 9 சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களும் ஒன்​றிணைக்​கப்​படும். 91.20 கி.மீ. நீளத்​துக்​குச் சுற்​றுக்​குழாய்​கள், 64.20 கி.மீ. நீளத்​துக்கு குடிநீர் பரி​மாற்​றக் குழாய்​கள் மற்​றும் 2.65 கி.மீ. நீளத்​துக்கு உந்து குழாய்​கள் பதிக்​கப்பட உள்​ளன. இந்​தக் கட்​டமைப்​பு​களில் நீரின் அழுத்​தம், தரம் மற்​றும் ஓட்​டத்தை அளவிட நவீன சென்​சார் கருவி​கள் பொருத்​தப்​படும். சென்னை குடிநீர் வாரி​யத் தலைமை அலு​வல​கக் கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்து இவற்​றைத் தொடர்ச்​சி​யாகக் கண்​காணித்து சீரான குடிநீர் வழங்​கலை தானி​யங்கி முறை​யில் மேற்​கொள்ள முடி​யும். இதன்​மூலம் சென்​னை​யில் அனைத்து பரு​வக்​காலங்​களி​லும் மக்​களுக்கு குடிநீர் தடை​யின்றி தேவைக்​கேற்ப சீரான அளவில் வழங்​கப்​படும் என்று தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பள்​ளிக்​கரணை​யில் ஆய்வு

இதைத்​தொடர்ந்து சோழிங்​கநல்​லூர் காரப்​பாக்​கத்​தில் உள்ள ஒக்​கி​யம் மடுவை முதல்​வர் விஜய் பார்​வை​யிட்​டார். வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்டு பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் மற்​றும் தெற்கு பக்​கிங்​ஹாம் கால்​வாய் பகு​தி​களில் நீர்​வளத் துறை​யால் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வெள்​ளத் தடுப்பு பணி​களை அவர் ஆய்வு செய்​தார்.

தென்​சென்​னை​யின் உயிர்​நாடி வடி​காலாக ஒக்​கி​யம் மடுவு விளங்​கு​கிறது. தென்​சென்னை புறநகர்ப் பகு​தி​களில் உள்ள ஏரி​களின் உபரி நீர் பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தில் சேர்ந்​து, ஒக்​கி​யம் மடு​வு, தெற்கு பக்​கிங்​ஹாம் கால்​வாய் மற்​றும் முட்​டுக்​காடு முகத்​து​வாரம் வழி​யாக மட்​டுமே கடலைச் சென்​றடைகிறது. 2023 டிசம்​பரில் மிக்​ஜாம் புயலின்​போது இந்த நீர்​வழி அடைபட்​ட​தால், வேளச்​சேரி, பள்​ளிக்​கரணை, பெருங்​குடி, துரைப்​பாக்​கம் உள்​ளிட்ட பகு​தி​களில் பல நாட்​கள் மழைநீர் தேங்கி பாதிப்​புக்​குள்​ளானது. இதற்கு நிரந்​தரத் தீர்வு காணும் வகை​யில் ஒக்​கி​யம் மடுவு தூர்​வாரப்​பட்டு ஆழப்​படுத்தி அகலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

கண்​ணகி நகர் மக்​களைப் பாது​காக்க வெள்​ளத் தடுப்​புச் சுவர்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. வெள்ள ஓட்​டத்​துக்​குத் தடை​யாக இருந்த காரப்​பாக்​கம் பாலம் (70 மீட்​டர்), சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தால் 120 மீட்​டர் அகல​மான உயர்​மட்​டப் பால​மாக மாற்​றியமைக்​கப்​பட்டு வரு​கிறது. ஒக்​கி​யம் மடு​வு, வேளச்​சேரி, கோவிலம்​பாக்​கம், நாராயணபுரம், ஆதம்​பாக்​கம் ஏரி​கள் மற்​றும் கால்​வாய்​களில் உள்ள ஆகா​யத் தாமரை மற்​றும் கழி​வு​கள் கனரக இயந்​திரங்​கள் மூலம் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. இதுதவிர மழைநீர் விரை​வாகக் கடலில் கலக்க முட்​டுக்​காடு முகத்​து​வாரம் தொடர்ந்து திறந்​தநிலை​யில் பரா​மரிக்​கப்​படு​கிறது. தாம்​பரம், பல்​லா​வரம் பகு​தி​களில் உள்ள உபரிநீர் கால்​வாய்​கள் சுத்​தம் செய்​யப்​பட்டு மதகுக் கதவு​களும் பரா​மரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

முதல்​வர் உத்​தரவு

இந்த ஆய்​வின்​போது, பரு​வ​மழை தீவிரமடைவதற்கு முன்​பாக அனைத்​துப் பணி​களை​யும் விரைந்து முடிக்க வேண்​டும். வெள்​ளப் பாதிப்​புக்​குள்​ளாகும் பகு​தி​களில் மீட்பு இயந்​திரங்​களைத் தயார் நிலை​யில் வைக்க வேண்​டும். நீர்​மட்ட உயர்வை இரவு பகலாக கண்​காணிக்க வேண்​டும் என்று அலு​வலர்​களுக்கு முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டார். இந்த நிகழ்​வு​களில் அமைச்​சர்​கள் ந.ஆனந்த், ஆதவ் ​அர்​ஜு​னா, ப.வெங்​கடரமணன், ராஜ்மோகன், நெ.மரிய வில்​சன், ரா.கு​மார், நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி, நீர்​வளத்​துறை செயலர் பிர​சாந்த் எம். வடநரே, சென்னை பெருநகர் குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீரகற்று வாரி​யத்​தின் மேலாண்மை இயக்​குநர் த.ஆனந்த், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் மற்​றும் துறை சார்ந்த உயர் அ​தி​காரிகள் பங்​கேற்​றனர்​.