📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 19, 2026 02:03 PM

செம்பனைத் தோட்டத்தில் வனவிலங்குகள்: இந்தோனேசியா விசாரணை

செம்பனைத் தோட்டத்தில் வனவிலங்குகள்: இந்தோனேசியா விசாரணை

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மேம்பாட்டுப் பணிகள், சம்பந்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட கன்செ‌ஷன் வகை செம்பனைத் தோட்டத்தில் வனவிலங்குகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கு கலிமந்தானில் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான அப்பகுதியில் அண்மையில் ஓராங் ஊத்தான் என்று நம்பப்படும் விலங்கின் மண்டை ஓடு காணப்பட்டது. அதையடுத்து இந்தோனீசிய அரசாங்கம் விசாரணை நடத்திவருகிறது.

பிடி காயுங் அக்ரோ லெஸ்டாரி நிறுவனம்

அந்த மண்டை ஓடு, அக்டோபர் மாதம் 8ஆம் தேதி பிடி காயுங் அக்ரோ லெஸ்டாரி (PT Kayung Agro Lestari) நிறுவனத்தின் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அந்த வனப்பகுதி, காக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் அதிகம் வாய்ந்த (எச்சிவி) பகுதியாகும்.

கெட்டாப்பாங் பகுதியில் செயல்படும் பிடி காயுங் அக்ரோ லெஸ்டாரி, சிங்கப்பூரின் பெரிய வேளாண் நிறுவனமான ஃபர்ஸ்ட் ரிசோர்சசுக்குச் சொந்தமானது. எச்சிவி பகுதிகள், கன்செ‌ஷன் பகுதிகளில் சமூக, பல்லுயிரியல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இருப்பதாக அடையாளம் காணப்படும் பகுதிகளாகும்.

“அந்த எச்சிவி பகுதியில் இடம்பெற்ற கண்டுபிடிப்பைத் தற்போது கூட்டுக் குழு கையாண்டு வருகிறது. நிறுவனத்திடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்படுவதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும்,” என்று இந்தோனீசிய வனப்பகுதி விவகார அமைச்சின் பேச்சாளர் ரிஸ்டியான்டோ பிரிபாடி, அக்டோபர் 14ஆம் தேதி ஜகார்த்தா போஸ்ட் ஊடகத்திடம் தெரிவித்தார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்க அந்த மண்டை ஓடு எவ்வகை விலங்குக்குச் சொந்தமானது, அதன் மரணத்துக்கான காரணம், நேரம் ஆகிய தகவல்களை அறிய விசாரணை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

காயுங் அக்ரோ லெஸ்டாரி கிட்டத்தட்ட 10,000 ஹெக்டர் பரப்பளவிலான செம்பனைத் தோட்டப் பகுதியை நடத்திவருகிறது. அப்பகுதி, மேற்கு ஜாவா மாநிலத்தில் உள்ள பாண்டுங் நகரின் பரப்பளவில் பாதிக்கும் மேலானதாகும்.

அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட கன்செ‌ஷன் பகுதியில் கிட்டத்தட்ட 4,000 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட பகுதி, எச்சிவி வனப்பகுதிகளாக அடையாளம் காணப்பட்டவை. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகள் கிட்டத்தட்ட 180 போர்னியோ ஓராங் ஊத்தான்கள் கண்காணிக்கப்படும் இடமாக விளங்குகின்றன என்று 2019ஆம் ஆண்டு கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அந்தக் காலகட்டத்தில் காயுங் அக்ரோ லெஸ்டாரியை ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ் வாங்கவில்லை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஆர்எஸ்பிஓ சான்றிதழ்

நீடித்த நிலைத்தன்மை சான்றிதழான ஆர்எஸ்பிஓ, காயுங் அக்ரோ லெஸ்டாரி கவனிக்கும் சம்பந்தப்பட்ட செம்பனைத் தோட்டத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மரம், செடிகளை நடுவதற்கு முன்பு நிறுவனங்கள் பல்லுயிரியல், சமூக அம்சங்களை ஆராயவேண்டும்.