📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 24, 2026 10:04 PM

"சச்சின் அளவுக்கு ஆடினீங்க ஆனா அவரளவுக்கு பணம் சம்பாதிச்சீங்களா?" ஸ்டீவ் வாக் கேள்விக்கு ரஹானே பதில்

"சச்சின் அளவுக்கு ஆடினீங்க ஆனா அவரளவுக்கு பணம் சம்பாதிச்சீங்களா?" ஸ்டீவ் வாக் கேள்விக்கு ரஹானே பதில்

"சச்சின் அளவுக்கு ஆடினீங்க ஆனா அவரளவுக்கு பணம் சம்பாதிச்சீங்களா?" ஸ்டீவ் வாக் கேள்விக்கு ரஹானே பதில்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே நடத்திய இணைய உரையாடல் நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது ரஹானேவின் பேட்டிங் நுணுக்கங்களை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டுப் பேசிய ஸ்டீவ் வாக், அவரிடம் கிண்டலாக ஒரு கேள்வியைக் கேட்டார்.

ரஹானேவின் பேட்டிங் முறை, நேர்த்தியான ஸ்ட்ரைட் டிரைவ் ஆகியவை சச்சினைப் போலவே இருப்பதாகவும், அவரைத்தான் பின்பற்றி ஆடினீர்களா? என்று ஸ்டீவ் வாக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ரஹானே, "மும்பையில் வளர்ந்த எங்களைப் போன்ற பலருக்கு சச்சின்தான் முன்மாதிரி. சிறுவயதில் தெருவில் நண்பர்களுடன் விளையாடும் போது சச்சின் பேட்டைப் பிடிப்பது போலவும், ஸ்ட்ரைட் டிரைவ் அடிப்பது போலவும் தான் நான் விளையாடிப் பழகுவேன். பின்னர் அவருடனேயே இணைந்து விளையாடும் பாக்கியம் கிடைத்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அப்போது ஸ்டீவ் வாக், "அவரைப் போலவே ஆடினீர்கள் சரி, சச்சின் அளவுக்கு பணமும் சம்பாதித்தீர்களா?" எனக் கிண்டலாகக் கேட்டார். அதற்கு கொஞ்சமும் யோசிக்காத ரஹானே, "இனிமேல் தான் சம்பாதிக்க வேண்டும்!" என்று சிரித்தபடி சாமர்த்தியமாகப் பதிலளித்தார். இந்த கலகலப்பான உரையாடல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

கடந்த ஜூலை 30, 2026 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரஹானே, இந்திய அணிக்காக 195 சர்வதேச போட்டிகளில் ஆடி 15 சதங்களுடன் 8,414 ரன்கள் குவித்துள்ளார். இதில் 85 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்களுடன் 5,077 ரன்கள் சேர்த்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 188 ரன்கள் ஆகும்.

மேலும் 6 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய ரஹானே, ஒரு தோல்வி கூட இல்லாமல் 4 வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். குறிப்பாக 2020-21 ஆஸ்திரேலிய தொடரில் ரஹானே தலைமையில் ஆடிய இந்திய அணி அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டாலும், அபாரமாக மீண்டு வந்து வென்றது. மேலும் அந்த தொடரையும் 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.