📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 07, 2026 05:00 PM

சாங்கி விமான நிலையத்தில் பல முறை வாசனைத் திரவியம் திருடிய அமெரிக்க ஆடவர் கைது

சாங்கி விமான நிலையத்தில் பல முறை வாசனைத் திரவியம் திருடிய அமெரிக்க ஆடவர் கைது

சாங்கி விமான நிலையத்தின் பயண மாறுதல் பகுதிகளில் உள்ள கடைகளில் திருடியதாக 47 வயது அமெரிக்க ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தக் கடைகளில் அவர் $1,400க்கும் மேல் மதிப்புடைய வாசனைத் திரவியங்களைத் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது பற்றித் தகவல் அறிந்த விமான நிலையக் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள், செப்டம்பர் 25ஆம் தேதி பயண மாறுதல் பகுதியில் காணப்பட்ட அந்த ஆடவரைக் கைது செய்தனர்.

சாங்கி விமான நிலையத்தின் வெவ்வேறு முனையங்களுக்கு வந்து சென்றபோதெல்லாம் அந்த ஆடவர் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரைப் பிடிக்கத் திட்டமிடப்பட்டதாக புதன்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.

முதல் திருட்டு நடந்தது பற்றி 2025 நவம்பர் 5ஆம் தேதி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள கடையில் வாசனைத் திரவியப் பெட்டி ஒன்று காணாமல் போனதாக கடை உதவியாளர் தெரிவித்திருந்தார். சிசிடிவி படக் காட்சிகளைப் பார்த்தபோது $331 மதிப்புள்ள அந்த வாசனைத் திரவியத்தை ஆடவர் ஒருவர் எடுத்துக்கொண்டு, பணம் செலுத்தாமல் அங்கிருந்து சென்றது தெரியவந்தது.

விசாரணை நடத்தியபோது, அதே நாளில் அந்த ஆடவர் முனையம் 2ல் உள்ள இரண்டு கடைகளிலிருந்து $646 மதிப்புள்ள வாசனைத் திரவியத்தை எடுத்துக்கொண்டு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுவிட்டார்.

பிறகு இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதியும் இரண்டு கடைகளில் அவர் திருடியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆடவர் மீது வியாழக்கிழமை (அக்டோபர் 8) திருட்டுக் குற்றம் சுமத்தப்படும்.