சாலமன் பாப்பையா காலமானார்
சென்னை: பட்டிமன்ற நடுவரும், மூத்த தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (90) இன்று காலமானார். 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்தார்.பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்.
மதுரையைச் சேர்ந்த இவர், தனது தனித்துவமான பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர், மதுரை, அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய சிறந்த உரைகளாலும் மிகவும் பிரபலமானவர். மேலும், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு விளக்க உரையும் எழுதியுள்ளார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டி, தமிழக அரசு கடந்த 2000ஆம் ஆண்டு இவருக்குக் ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் மத்திய அரசு இவருக்குப் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிச் சிறப்பித்தது.
இலக்கியப் பணி மட்டுமின்றி, ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 90 வயதான சாலமன் பாப்பையா, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இவரது மனைவி வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இந்தநிலையில் சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
அன்னாரது மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.