BB Tamil 10: அலைப்பறை செய்த ஜோடி; சிக்ஸர் அடிக்கும் முனியம்மாள்
நான்காவது வாரத்தில் என்ன நடந்தது?
இந்த வாரத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களையும் சுவாரசியமான காரெக்டர்களையும் மட்டும் விரிவாகப் பார்க்கலாம்.
முதலில் விஜய் சேதுபதியிடமிருந்தே துவங்கி விடுவோம்.
கமல்ஹாசன் ஹோஸ்ட்டாக இருந்தவரை, வார எபிசோடுகளைப் பார்க்காதவர்கள் கூட, கமலுக்காகவே வீக்கெண்ட் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் உண்டு. ஆனால் விஜய் சேதுபதி வந்தவுடன், பிக் பாஸ் லைவ் உட்பட பார்ப்பவர்கள் கூட வீக்கெண்ட் நிகழ்ச்சியைப் பார்த்து சோர்வாகி விடுகிறார்கள். இதற்கு நானே சாட்சி.
கமலின் விசாரணையே அத்தனை சுவாரசியமாக இருக்கும். ஆட்டத்தில் சறுக்கிய போட்டியாளரிடம் முகத்தில் அறைவது போல் கேள்வி கேட்காமல், சுற்றி வளைத்து சிலந்தி வலை மாதிரி பின்னி முத்தாய்ப்பாக ஓரிடத்தில் நிறுத்தி கொக்கியைப் போடும் போது எந்தவொரு போட்டியாளரும் தப்பிக்க முடியாது. கோர்ட் ரூம் டிராமா மாதிரி இந்த மாதிரியான காட்சிகள் பார்க்கவே சுவையாக இருக்கும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், போட்டியாளர் தான் செய்த தவறை தானே உணர்ந்து ஒப்புக் கொள்ளுமளவிற்கு அழுத்தமான வார்த்தைகளில் விவரிக்கும் கமல், அதே சமயம் அவரது மனம் காயப்படாமலும் ஜாக்கிரதையாக நடந்து கொள்வார். அவர் நிகழ்த்தும் வார்த்தை விளையாட்டுகள், அதிலிருக்கும் அபாரமான நகைச்சுவை, இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழ் போன்றவை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்.
சில விஷயங்களுக்கு தன்னுடைய திரை வாழ்க்கை, சொந்த அனுபவம் போன்றவற்றில் இருந்து உதாரணம் சொல்லி இன்ஸ்பயர் செய்வார். (‘நான் இருந்த ஊரில் ஒரு ராஜாஇருந்தார்’ என்கிற மாதிரி சமயங்களில் இது ஓவர் டோஸாகவும் ஆகி விடும்). மிக முக்கியமாக புத்தகப் பரிந்துரை. வாரம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை சுருக்கமாக விவரிப்பார்.