📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 12, 2026 01:04 AM

அபிஷேக் சர்மா 'சரவெடி' அரைசதம்: இந்திய அணி அசத்தல் வெற்றி

அபிஷேக் சர்மா 'சரவெடி' அரைசதம்: இந்திய அணி அசத்தல் வெற்றி

இந்துார்: மூன்றாவது 'டி-20' போட்டியில் அபிஷேக் சர்மா, 18 பந்தில் அரைசதம் விளாச, இந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.

மூன்றாவது போட்டி நேற்று, இந்துார் (ம.பி.,), ஹோல்கர் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் ஷிவம் துபே, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, நிதிஷ் குமார் ரெட்டி, பிரின்ஸ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரொமாரியோ ஷெப்பர்டு, அகில் ஹூசைனக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட, குயின்டின் சாம்ப்சன், கீமோ பால் இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற கேப்டன் ஷாய் ஹோப், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு துவக்கத்தில் சஞ்சு சாம்சன் (3) ஏமாற்றினார். பின் அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ராஸ்டன் சேஸ் ஓவரில் (3வது) அபிஷேக் 4, 6, 6 என விளாசினார். கீமோ பால் ஓவரில் இஷான் இரண்டு பவுண்டரி அடித்தார். ஸ்பிரிங்கர் ஓவரில் (5வது) அபிஷேக் 4, 4, 4, 6 என அடித்து நொறுக்க, மொத்தம் 21 ரன் கிடைத்தன.

ஷாமர் ஜோசப் வீசிய ஓவரில் இஷான் ஒரு பவுண்டரி, அபிஷேக் 6, 4, 4, என பதம் பார்க்க, மீண்டும் 21 ரன் கிடைத்தன. அபிஷேக், 18 பந்தில் அரைசதம் எட்டினார். 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) முடிவில், இந்தியா 87/1 ரன் குவித்தது.

ராஸ்டன் 2 விக்.,

இந்த நேரத்தில் 'ஸ்பின்னர்' ராஸ்டன் சேஸ், ஒரே ஓவரில் (9வது) 2 விக்கெட் சாய்த்து, மீண்டும் தொல்லை கொடுத்தார். இவரது பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த இஷான் கிஷான் (37) அவுட்டானார்.

அடுத்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (1) எல்.பி.டபிள்யு., ஆனார். ஸ்பிரிங்கர் பந்தில் அபிஷேக் சர்மா (69 ரன், 30 பந்து, 6x4, 5x6) வெளியேற, இந்தியா 10 ஓவரில் 125/4 என சரிந்தது. நமன் திர் (10) நிலைக்கவில்லை. ஷாமர் ஜோசப் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய நிதிஷ் குமார், 21 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார்.

திலக் வர்மா (28), அக்சர் படேல் (20) வீணாக ரன் அவுட்டாகினர். ஷாமர் ஜோசப் வீசிய கடைசி ஓவரில் பிரின்ஸ் யாதவ், 3 பவுண்டரி அடித்து அசத்தினார். இந்தியா 20 ஓவரில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிரின்ஸ் யாதவ் (13) அவுட்டாகாமல் இருந்தார்.

விக்கெட் சரிவு

கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் திணறியது. அர்ஷ்தீப் சிங் 'வேகத்தில்' கேப்டன் ஷாய் ஹோப் (5) போல்டாகி, அதிர்ச்சி தந்தார். அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் ஹெட்மெயர் (6,4,4,4) விளாச, மொத்தம் 19 ரன் எடுக்கப்பட்டன. ஹெட்மெயர், 43 ரன்னுக்கு அவுட்டானார். ராவ்மென் பாவெல் (5) நிலைக்கவில்லை.

நமன் திர் ஓவரில் 3 சிக்சர் அடித்த கமில் பூரன், 42 ரன்னுக்கு வெளியேறினார். நிதிஷ் குமார் பந்தில் சாம்ப்சன் (21) அவுட்டானார். ரூதர்போர்டு, 32 ரன் எடுத்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 37 ரன் தேவைப்பட்டன. அனுபவ அக்சர் படேல் சாதுர்யமாக பந்துவீசினார். ஸ்பிரிங்கர் 6,4,6,6 என விளாசிய போதும், 22 ரன் மட்டுமே கிடைத்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 209/7 ரன் எடுத்து, தோல்வி அடைந்தது. இந்தியா தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

அதிவேக 2000 ரன்

சர்வதேச 'டி-20' அரங்கில் நேற்று அதிவேகமாக 2000 ரன் (1024 பந்து) எட்டினார் இந்தியாவின் அபிஷேக் சர்மா. அடுத்த இரு இடத்தில் சூர்யகுமார் (1164, இந்தியா), ஆரோன் பின்ச் (1283, ஆஸி.,) உள்ளனர்.

* சர்வதேச 'டி-20' ல் (ஐ.சி.சி., முழு உறுப்பு அணிகள்), ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தை அபிஷேக் சர்மா (68 சிக்சர், 2026), சூர்யகுமார் ( 68 சிக்சர், 2022) பகிர்ந்து கொண்டனர்.

திலக் வர்மா அலட்சியம்

குடகேஷ் பந்தை (16.4) விளாசினார் அக்சர் படேல். இதை 'டீப் ஸ்கொயர் லெக்' திசையில், எல்லை அருகே தட்டுத்தடுமாறி தடுத்த கமில் பூரன், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் நோக்கி எறிந்தார். இந்த சமயத்தில் ஒரு ரன் ஓடி முடித்த அக்சர் படேல், திலக் வர்மா, பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டதாக தவறாக நினைத்தனர். ஆடுகளத்தின் மத்தியில் 'கிளவுசை' உரசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின் அக்சர் 'கிரீசை' எட்டி விட்டார். இதை பார்த்த ஹோப், சாதுர்யமாக எதிர்முனையில் நின்ற குடகேஷ் வசம் பந்தை எறிந்தார். அவர் 'பெயில்சை' தகர்க்க, திலக் வர்மா வீணாக ரன் அவுட்டானார். பூரன் சரியாக பந்தை தடுத்ததை 'டிவி' அம்பயரும் உறுதி செய்தார். களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் அலட்சியமாக செயல்பட்ட துணை கேப்டன் திலக் வர்மா, ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.